சிக்ஸர் அடித்து சதம் – சொந்த மண்ணில் முதல் சதம் விளாசி யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை!
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதன்படி, ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 41 பந்துகள் பிடித்து 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் வழக்கம் போன்று இந்த முறையும் சொதப்பினார். அவர், அதிரடியாக 5 பவுண்டரி விளாசிய நிலையில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தார். ஆனால், ஜெய்ஸ்வால் வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார். அவர், 150 பந்துகளில் 94 ரன்கள் எடுத்திருந்த போது, டாம் ஹார்ட்லி வீசிய 48.3ஆவது பந்தில் சிக்ஸர் விளாசி சொந்த மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதற்கு முன்னதாக தனது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்தார். அந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், தான் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு இளம் வீரராக சொந்த மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.