பெரம்பலூரில் போட்டியிட திமுக மேலிடம் கிரீன் சிக்னல்? விறுவிறுவென வேலையை ஆரம்பித்த அமைச்சர் மகன்!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவுக்கு கட்சி மேலிடம் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக தெரிகிறது.
இதனால் தான் என்னவோ அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடிய அருண் நேரு, பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளை நேரில் சென்று சந்தித்து சில மணி நேரங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடக் கூடும் என ஒன் இந்தியா தமிழ் ஏற்கனவே கூறியிருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக தான் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் நடக்க ஆரம்பித்துள்ளன.
அருண் நேருவை அரசியலுக்கு முழுமையாக இழுத்து வந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், அவரை அடுத்ததாக எம்.பியாக்கி டெல்லிக்கு அனுப்பி வைக்க முயற்சித்து வருகின்றனர். திருச்சியை பொறுத்தவரை ஏற்கனவே அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கே.என்.நேரு என மிகப் பெரிய இரண்டு பவர் செண்டர்கள் உள்ள நிலையில் அருண் நேருவையும் திருச்சியில் களமிறக்க திமுக தலைமை விரும்பவில்லை. இதனால் தான் தனது சித்தப்பா மறைந்த ராமஜெயம் போட்டியிட விரும்பிய பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட அருண் நேருவும் ஆர்வம் காட்டி வருகிறார்.
தனது அப்பா நேருவை போலவே இப்போது கட்சியினர் இல்ல நிகழ்வுகளில் கலந்துகொள்வதோடு, திருச்சியில் இருந்தால் தினமும் அலுவலகம் சென்று பார்வையாளர்களையும் சந்திக்க ஆரம்பித்துள்ளார் அருண் நேரு. முதலில் மகனை அரசியலுக்கு அழைத்து வர அமைச்சர் நேரு மிகவும் தயங்கினார். தன்னோடு அரசியல் போதும் என்று கூட நினைத்தார், ஏனெனில் அந்தளவுக்கு அவரது தம்பி ராமஜெயத்தின் மறைவு நேருவின் மனதை பாதித்திருந்தது.
ஆனால் ஆதரவாளர்கள் கொடுத்த அழுத்தத்தால் மகனின் அரசியல் வருகைக்கு நேரு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. பெரம்பலூர் தொகுதியை பொறுத்தவரை இதற்கு முன்னர் 2009-2014ல் அமைச்சர் நேருவின் அக்கா மகனும், நடிகருமான நெப்போலியன் போட்டியிட்டு வெற்றிபெற்று மத்திய இணை அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.