மனித மூளைக்குள் சிப்.. சோதனையை தொடங்கிய எலான் மஸ்க் நிறுவனம்
மனித மூளையுடன் சிப் இணைக்கும் புதிய சோதனையை எலான் மஸ்க்கின் நிறுவனம் களமிறங்கியுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், விண்வெளி மற்றும் மருத்துவத்துறையிலும் புதுமைகளை புகுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக நியூராலிங்க் என்ற நிறுவனத்தை தொடங்கிய மஸ்க், மூளையில் உள்ள நரம்புகளை தூண்டும் புதிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்.
அண்மையில் குரங்குகள் மீது நடத்தப்பட்ட சோதனை வெற்றி கண்டதை அடுத்து மனிதர்கள் மீது சோதனை நடத்தவும் அமெரிக்கா அனுமதி அளித்தது. முதற்கட்டமாக, மூளையில் பாதிப்பு ஏற்பட்ட நபரின் மூளையில் நியூராலிங்க் நிறுவனம் வடிவமைத்த சிப் இணைக்கப்பட்டது. முதல் சிப்புக்கு பெயர் டெலிபதி என்று அவர் வைத்துள்ளார்.
மனித மூளைக்கு சிக்னல்கள் அளிப்பதன் மூலம் நரம்புகள் தூண்டப்பட்டு, ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நபர் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் முதல் நோயாளிக்கு நியூராலிங்கின் சிப் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாகவும்,அவர் உடல்நலம் தேறி வருவதாகவும் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மூளையில் பொருத்தப்பட்டுள்ள சிப் மூலம் கணினிகளை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு இணைப்பையும் நியூராலிங்க் நிறுவனம் சிப்பை வடிவமைத்துள்ளது. கை, கால்கள் இழந்தவர்களுக்கு முதல் கட்டமாக இந்த சிப்களை பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் நல்ல பலன் தரும்பட்சத்தில் மருத்துவத்துறையில்,, குரிப்பாக நரம்பியல்துறையில் மிகப்பெரிய பாய்ச்சலாக அமையும் என்றும் நம்பப் படுகிறது. இந்த வகை ஆராய்ச்சிக்காக மனிதரின் மண்டை ஓட்டில் துளையிட்டு சிப் பொருத்தப்படுகிறது.
80,90களில் திரைப்படங்களில் கேள்விப்பட்ட சைபோர்க் ஆக மனிதர்கள் மாறுவார்கள் என்பதன் தொடக்கமாகவே இந்த ஆராய்ச்சி கருதப்படுகிறது.