ரூ.1.35 லட்சத்தில் W175 Street மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்திய Kawasaki!
கோவாவின் Vagator-ல் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா பைக் வீக் 2023 நிகழ்வில், ஜப்பானிய இருசக்கர வாகன நிறுவனமான கவாஸாகி (Kawasaki), தனது புதிய மோட்டார் சைக்கிளான W175 Street-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த புதிய பைக் ரூ.1.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற அறிமுக விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் பார்வையிலேயே கவனத்தை ஈர்க்கும் வகையில் W175 Street பைக் ரெட்ரோ கிளாசிக் ஸ்டைலில் இருக்கிறது. நிறுவனம் அதன் மிகவும் மலிவு விலை மோட்டார் சைக்கிளான ஸ்டாண்டர்ட் W175-ன் புதிய வெர்ஷனாக இந்த W175 Street-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கவாஸாகியின் இந்த புதிய பைக் சக்திவாய்ந்த 177 சிசி சிங்கிள் சிலிண்டர் ஃப்யூவல்-இன்ஜெக்டட் எஞ்சினுடன் வருகிறது.
இந்த பைக்கின் டெலிவரி இந்த மாதத்திலேயே (டிசம்பர்,2023) துவங்கும் என்று Kawasaki தெரிவித்துள்ளது. தனது புதிய W175 Street பைக்கானது இந்தியர்களுக்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மேட்-இன்-இந்தியா பைக் என்று கவாஸாகி கூறுகிறது. கவாஸாகியின் புதிய W175 Street பைக்கானது ரெட்ரோ-தீம் கொண்ட க்ரோம் பெஸலுடன் கூடிய சர்குலர் மல்டி-ரிஃப்ளெக்டர் ஹெட்லேம்புடன் வருகிறது. இந்த பைக் கேண்டி எமரால்டு கிரீன் மற்றும் மெட்டாலிக் மூன்டஸ்ட் கிரே உள்ளிட்ட கலர்ஆப்ஷன்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கும் W175 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.47 லட்சமாக உள்ளது. அந்த வகையில் பார்த்தால் தற்போது அறிமுகமாகி இருக்கும் புதிய W175 Street பைக்கின் விலை ரூ.12,000 குறைவாகும். புதிய Kawasaki W175 Street பைக்கானது செமி-டபுள் கிராடில் ஃப்ரேமில் பில்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய மோட்டார் சைக்கிள் செமி-டிஜிட்டல் ரெட்ரோ-தீம்ட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை கொண்டுள்ளது. W175 ஸ்டாண்டர்ட் வெர்ஷனில் வயர்-ஸ்போக் வீல்ஸ் மற்றும் ட்யூப் டயர் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய W175 Street வெர்ஷனில் அலாய் வீல்ஸ் மற்றும் டியூப்லெஸ் டயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பைக்கின் சீட் ஹைட் 786.5 மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 152 மிமீ ஆகும்.
பிரேக்கிங்கை பொருத்த வரை புதிய W175 Street-ல் 270 மிமீ ஃப்ரன்ட் டிஸ்க் மற்றும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உள்ளது. இது டெலஸ்கோபிக் ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ் மற்றும் டூயல்-ஷாக் ரியர் சஸ்பென்ஷனையும் கொண்டுள்ளது. W175 Street பைக்கில் 5-ஸ்பீட் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட177 சிசி சிங்கிள் சிலிண்டர் ஃப்யூவல்-இன்ஜெக்டட் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சினானது 7,000rpm-ல் 12.82bhp பீக் பவரையும், 6,000rpm-ல் 13.3Nm பீக் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த பைக்கின் ஃப்யூயல் டேங்க் கெப்பாசிட்டி தொடர்ந்து 12-லிட்டராக உள்ளது. புதிய கவாஸாகி W175பைக்கானது ராயல் என்ஃபீல்ட் ஹன்ட்டர் 350 மற்றும் டிவிஎஸ் ரோனின் போன்ற பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.