ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்?

நாம் உடல் 60% நீரால் ஆனது. தவிர நம் உடலின் ஒவ்வொரு உறுப்பின் இயக்கத்திற்கு நீர் அவசியம். நம் உடலில் தினமும் உண்டாகும் கழிவுகளை சிறுநீர், வியர்வை மூலம் நீக்க, இரத்த ஓட்டம் சீராக இருக்க, சிறுநீர்க் குழாய்களை கழுவி விட்டு அவற்றில் கிருமிகள், கசடுகள், கற்களின் முன்னோடியான படிகங்கள் சேராமல் இருக்க என்று பல அவசியங்களுக்கு குறைந்த பட்சம் நீர் தேவைப்படுகின்றது. நம் உடலில் நீரின் அளவு தேவையை விடக் குறையும் போது பல உறுப்புகள் வேலை செய்ய முடியாமல் தளர்ந்து விடும்.

சிறுநீர், வேர்வை,சுவாசம், மலம், மூலமாக நம் உடலில் இருந்து நீர் சிறிது சிறிதாக வெளியேறிக் கொண்டே இருக்கின்றது. இவற்றில் நம் சிறுநீரின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்வதன் மூலம் சிறுநீரகங்கள் நம் உடலில் நீரின் சமச்சீர் தன்மையை நிர்வகிக்கின்றன.12 வயதிற்கு மேல் அனைவரும் சராசரியாக 1 1/2 லிட்டர் சிறுநீர் கழிக்கின்றனர் இதை சரிகட்ட அனைவரும் குறைந்த பட்சம் 2 லிட்டர் நீர் அருந்த வேண்டும். அமெரிக்க மருத்துவ கழகம் ஆண்கள் குறைந்த பட்சம் 3 விட்டர் நீரும் பெண்கள் 2 1/2 லிட்டர் நீரும் அருந்த வேண்டும் என்று பரிந்துரைக்கின்றது. ஆனால் அது குளிர் தட்ப வெப்பம் உள்ள நாடுகளுக்குதான் பொருந்தும்.

சிறுநீர் வெளிர் மஞ்சள் அல்லது நிறமின்றிப் போனால் நீங்கள் குடிக்கும் நீரின் அளவு சரியென்று அர்த்தம். அடர் மஞ்சள் நிறத்தில் போனால் குடிக்கும் நீரின் அளவு குறைவு என்று அர்த்தம். உடற்பயிற்சி செய்பவர்கள் மேற் சொன்னதை போல 1 1/2 மடங்கு அதிகம் நீர் அருந்த வேண்டும். வெயில் காலத்திலும் அதிகம் வேர்க்கும் சமயத்திலும் அதிக் நீர் குடிக்க வேண்டும். குளிர் காலத்தில் சாதாரண அளவு நீர் போதுமானது. காய்ச்சல், வாந்தி, பேதி வந்தால் நீர் வேறு வழிகளில் வீணாகி உடலில் நீரின் அளவு குறையும். இந்த சமயங்களில் நீர் அதிகம் குடிக்க வேண்டும்.

பெண்கள் கருவுற்றிருக்கும் போது 2½லிட்டர், தாய்பால் கொடுக்கும் போது 3 லிட்டர் குறைந்த பட்சம் நீர் அருந்துமாறு அறிவுறித்தப்படுகின்றனர்.
தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள் அநேகமாக மொத்த எடையும் நீரால் ஆனவை. பால், மோர், இளநீர், பழச்சாறுகள், எலுமிச்சை நீர், சர்பத் ஆகியவை நீர் மிகுந்தவை. அவை உடலிற்கு நீர்ச்சத்தை கொடுக்கும் வெயில் காலங்களில் இவைகளை அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம்.

நீர் குறைவாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகள்.

•உடல் எடை, சத்து குறையும்.
•சோர்வு.
•தாகம் வாய் உலர்தல்.
•மயக்கம், தலைவலி.
•சிறுநீர் குறைவாக அடர்த்தியாக போகுதல், சிறுநீரகங்களில் அடிக்கடி கிருமித்தாக்கம், கற்கள்.

இத்தகைய சிறுநீரக தொந்திரவுகள் இருப்பவர்கள் அதிக அளவு நீர் குடித்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும். தினமும் சுமார் 2 லிட்டர் சிறுநீரேனும் பிரியும்படி தேவையான அளவு நீரைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்

அடிக்கடி நீர் அருந்தி இந்த பிரச்சினைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *