மஹிந்திரா தார் இனி விற்பனையான மாதிரிதான்.. போட்டிக்காக கொண்டு வந்த கார் மாடலின் விலையை குறைத்த மாருதி!
இந்தியாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஓர் கார் மாடலே மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) ஆகும். மஹிந்திரா நிறுவனத்தின் தார் (Mahindra Thar) எஸ்யூவி காருக்கு போட்டியளிக்க வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்திலேயே இந்த காரை மாருதி சுஸுகி இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கியது.
மூன்று கதவுகள் மட்டுமே கொண்ட கார் மாடலாகவே தார் தற்போது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே, மாருதி சுஸுகி, ஜிம்னியை ஐந்து கதவுகள் கொண்ட வெர்ஷனில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இவ்வாறு இன்னும் பல நிலைகளில் தார் காருக்கு எதிராக இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே ஜிம்னியை மாருதி சுஸுகி உருவாக்கம் செய்திருக்கின்றது.
இதுதவிர, சென்ற ஆண்டின் இறுதியில் இந்த காரின் விலையை மிகப் பெரிய அளவில் குறைத்து தார் காருக்கு கூடுதல் போட்டியை ஏற்படுத்தியது. இந்த விலை குறைப்பானது குறுகிய கால சலுகை என நிறுவனம் அறிவித்து. இதைத்தொடர்ந்து, சென்ற ஜனவரி மாதத்தில் ஜிம்னியின் விலையை உயர்த்தியது. பழைய விலைக்கே அதனைக் கொண்டு வந்தது.
மாருதி சுஸுகியின் இந்த நடவடிக்கையால் மகிழ்ச்சியில் இருந்த ஜிம்னி கார் விரும்பிகள் மிகப் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகினர். இந்த நிலையிலேயே இப்போது மீண்டும் ஜிம்னி காரின் விலையை மாருதி சுஸுகி குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனவரி மாதத்தில் விலை உயர்த்தப்பட்ட நிலையில் பிப்ரவரியில் விலை குறைக்கப்பட்டு இருப்பது மாருதி சுஸுகியின் திக்குமுக்காடு மனநிலையை குறிக்கும் வகையில் இருக்கின்றது.
அதேவேளையில், மாருதி சுஸுகி மட்டுமல்ல இன்னும் சில நிறுவனங்களும் தங்களின் புதிய வாகனங்களின் விலை குறைத்திருக்கின்றன. அந்தவகையில், சீன கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி (MG)-யும் அதன் குறிப்பிட்ட சில கார் மாடல்களின் விலையைக் குறைத்து நடவடிக்கை எடுத்திருக்கின்றன. இந்த நிலையிலேயே மாருதியும் யாரும் எதிர்பார்க்காத தகவலாக ஜிம்னி விலை குறைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.
அதேவேளையில் குறிப்பிட்ட சில வேரியண்டுகளின் விலையை மட்டுமே மாருதி சுஸுகி குறைத்திருக்கின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜெட்டா ஏடி, ஆல்ஃபா ஏடி மற்றும் ஆல்ஃபா ஏடி டூயல் ஜோன் ஆகியவற்றின் விலையையே குறைத்திருக்கின்றது. ரூ. 10 ஆயிரம் வரை இந்த வேரியண்டுகளின் விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது.
மற்ற எந்த வேரியண்டுகளின் விலையையும் மாருதி குறைக்கவில்லை. ஆகையால், பழைய விலைப்படியே அவை விற்கப்படுகின்றன. இந்தியாவில் மாருதி சுஸுகி ஜிம்னி ரூ. 12.74 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் பிரீமியம் தர அம்சங்கள் நிறைந்த ஆஃப்ரோடு எஸ்யூவி ரக காராகும்.
பெரியதொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஏசி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா மற்றும் ஆறு ஏர் பேக்குகள் என ஏகப்பட்ட அம்சங்களை இந்த வாகனத்தில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனே இந்த காரில் வழங்கப்படுகின்றது.
இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் மோட்டார் தேர்வு மட்டுமே ஜிம்னியில் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. டீசல் ஆப்ஷன் இதில் வழங்கப்படவில்லை. இதனால்தான் இந்தியர்கள் மத்தியில் தார் காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஏனெனில் தார் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு மோட்டார் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன.