கொஞ்சம் மிஸ்ஸானாலும் டயர் காலி.. அரசாங்கம் பல லட்சம் செலவழிச்சு போட்ட கருவியை வெறும் காலால் காலி செய்த மக்கள்!
இந்தியாவில் போக்குவரத்து காவல்துறைக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது போக்குவரத்து விதிமீறல்கள். இதன் எண்ணிக்கையும், இதை செய்வோரின் எண்ணிக்கையும் மிகப் பெரிய அளவில் வளர்ந்துக் காணப்படுகின்றது. எனவேதான் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் சில, வெளிநாடுகளில் கடைபிடிக்கப்படும் போக்குவரத்து விதிமீறல் தடுப்பு யுக்திகளைக் கையாள தொடங்கி இருக்கின்றன.
அந்தவகையில், முக்கிய சாலைகளில் கண்கானிப்பு கேமிராக்களைப் பொருத்தி போக்குவரத்து ஆய்வு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அதே கேமிராக்கள் வாயிலாக விதிமீறலில் ஈடுபடும் வாகன்களையும், வாகன ஓட்டிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அபராதங்களையும் அவர்கள் விதித்து வருகின்றனர். இதுபோன்று இன்னும் பலகட்ட நடவடிக்கைகளை போக்குவரத்து காவல்துறை எடுத்து வருகின்றது.
அந்தவகையிலேயே, சத்திஸ்கர் மாநிலத்தில் தவறான பாதையில் பயணத்தை மேற்கொள்வோரைக் கட்டுப்படுத்தும் விதமாக நவீன கருவிகளை அம்மாநில அரசு மாநிலத்தின் முக்கிய சாலைகளில் பொருத்தி இருக்கின்றது. டயர் கில்லர் எனும் கருவியையே அது முக்கிய சாலைகளில் பொருத்தி இருக்கின்றது. இந்த கருவியானது தவறான பாதையில் வரும் வாகனங்களின் டயரை வெறிக் கொண்ட நாய் கடித்து குதறுவதைப் போல முழுமையாக சிதைத்துவிடும்.
இத்தகைய ஓர் கருவியையே வாகன ஓட்டிகள் அதிகமாக தவறான பாதையில் பயணிக்கும் சாலைகளைக் கண்டறிந்து பொருத்தி இருக்கின்றது. இந்த கருவியையே தங்களின் அதீத யோசனை திறன் வாயிலாக சத்திஸ்கர் மாநில வாசிகள் அசால்டுச் செய்துக் கொண்டிருக்கின்றனர். டயர் கில்லர் கருவியானது எதிர் திசையில் வரும் வாகனங்கள், அதாவது, தவறான திசையில் வரும் வாகனங்களின் டயரை மட்டுமே பதம் பார்க்கும்.
சரியான திசையில் வரும் வாகனங்களின டயருக்கு அது எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் சரியான திசையில் வரும் வாகனங்கள் அந்த கருவியின் மீது ஏறும் போது கூர்மையான முனைகளைக் கொண்ட அந்த உலோகம் தரையோடு தரையாக புதைந்துவிடும்.
பின்னர் அந்த வாகனத்தின் டயர்கள் ஏறி இறங்கிய பின்னர் மீண்டும் அந்த கூர்முனைகள் மேலே வந்துவிடும். இதையே தங்களுக்கு சாதகமாக தவறான பாதையில் வருபவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். அதாவது, ஓர் நபர் அந்த கருவியின் மீது ஏறி நின்று கூர்முனையை அழுத்திக் கொள்ள அதன் மீது வாகன ஓட்டிகள் சர்வசாதாரணமாக கடந்துச் செல்கின்றனர்.
ஆகையால், அரசு பல லட்சம் ரூபாய்களை செலவழித்து போடப்பட்ட அந்த டயர் கில்லர் கருவி பயனற்றதாக மாறி இருக்கின்றது. ராய்பூர் முனிசிபல் கார்பரேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலேயே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
போக்குவரத்து விதிமீறலால் இந்தியா மிகப் பெரிய சிக்கலைச் சந்தித்து வருகின்றது. வாகன போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து உள்ளிட்டவற்றிற்கு மிக முக்கியமான காரணமாக தவறான பாதை பயணம் இருக்கின்றது. இதனால்தான் இந்த விதிமீறலுக்கு எதிராக இந்திய மாநிலங்கள் சில மிகக் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது.
மேலும், தவறான பாதை பயணத்தை தடுப்பதற்கான வழிகளையும் மேற்கொண்டு வருகின்றது. ஆனால், அரசு எடுத்து வரும் இதுமாதிரியான நடவடிக்கைகளை எல்லாம் ஒரு சிலர் சர்வசாதாரணாக உடைத்தெறிந்துவிடுகின்றனர். இது அரசுக்கும் குறிப்பிட்ட அந்த மாநகராட்சிக்கும் மற்றும் அந்த துறைச் சார்ந்தவர்களுக்கும் பெருத்த தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுகின்றது.