“ஈகோ” முடிவுக்கு வருகிறதா.. இஷான் கிஷன் கிரிக்கெட் வாழ்க்கை? மீண்டும் ரஞ்சியில் ஆடாத இளம் வீரர்!

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மீண்டும் ரஞ்சி டிராபி போட்டியில் களமிறங்காதது பல்வேறு குழப்பங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் கடைசி நேரத்தில் மனசோர்வடைந்ததாக கூறி இளம் வீரர் இஷான் கிஷன் இந்திய அணியில் இருந்து விலகினார். கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் தொடங்கி இந்திய அணி விளையாடும் அனைத்து வகையான தொடர்களிலும் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார்.

இதனால் உலகக்கோப்பை தொடருக்கு பின் சில நாட்கள் இஷான் கிஷன் விடுப்பு கேட்டதாகவும், அதற்கு பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகம் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷன் ஓய்வு கோரிய நிலையில், மாறாக டெஸ்ட் தொடரில் இருந்து இஷான் கிஷனுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அவருக்கு பதிலாக கேஎஸ் பரத் சேர்க்கப்பட்டார்.

அதன்பின் இந்தியாவுக்கு திரும்பிய இஷான் கிஷன், துபாயில் நடந்த தங்கையின் நிச்சயதார்த்தம் மற்றும் சில டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதையடுத்து இஷான் கிஷன் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு திரும்புவார் என்று பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இஷான் கிஷன் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட அறிவுறுத்தப்பட்டதாகவும் சில தகவல் வெளி வந்தன.

ஆனால் 5வது ரஞ்சி டிராபி போட்டியில் கூட ஜார்க்கண்ட் அணிக்காக இஷான் கிஷன் களமிறங்கவில்லை. அவரின் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்பது தகவல்களும் வெளியாகவில்லை. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர், இளம் வீரரான இஷான் கிஷன் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து பாதியோடு வந்திருக்க கூடாது. இதேபோன்று செயல்பட்டால், மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாகுவதே கடினம் தான். ஏனென்றால் ஏராளமான திறமையான வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.

எப்போதும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக திடீரென விடுப்பு கோரினால், அது தவறாக எடுத்து கொள்ளப்படவும் வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் அது அணி நிர்வாகத்தை கேள்வி கேட்பது போன்றதாகும் என்று தெரிவித்தார். இதனால் இஷான் கிஷன் மற்றும் இந்திய அணி நிர்வாகத்திற்கு இடையில் ஈகோ யுத்தம் நடப்பதாக பார்க்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *