பிரதமர் வேட்பாளர் எனும் ‘ஆணியே’ வேண்டாம்.. ‘இந்தியா’ கூட்டணியில் ஏன் சண்டை? ஒரே போடு போட்ட ‘பவார்’!
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை “இந்தியா” கூட்டணி பிரதமர் வேட்பாளர் இல்லாமலேயே சந்திக்கலாம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் யோசனை தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜகவை வீழ்த்தும் வகையில் 28 எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பாட்னா, பெங்களூர், மும்பை, டெல்லி என 4 ஆலோசனைக் கூட்டங்களை ‘இந்தியா’ கூட்டணி நடத்தி உள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்பது; தொகுதி பங்கீட்டை சுமூகமாக மேற்கொள்வது என்பது ‘இந்தியா’ கூட்டணியின் முன் உள்ள பிரதான சவால்கள். இதற்கு அப்பால், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் யார் என்பதிலும் பெரும் குழப்பம் நிலவுகிறது.
இந்தியா கூட்டனியின் ஒருங்கிணைப்பாளர் பதவி, பிரதமர் வேட்பாளர் ஆகியவற்றை ரொம்பவே எதிர்நோக்கி இருப்பவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். ஆனால் டெல்லியில் டிசம்பர் 19-ந் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை மமதா பானர்ஜியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தனர். இதில் நிதிஷ்குமாரும் அவரை ஆதரித்த லாலு பிரசாத் யாதவும் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் ‘இந்தியா’ கூட்டணியில் பிளவு ஏற்படும் நிலைமையும் உருவானது. இதனையடுத்து நிதிஷ்குமாரை தொலைபேசியில் அழைத்து ராகுல் காந்தி சமாதானப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய நிதிஷ் குமார், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடுதான் இப்போது முதன்மையானது. ஒருங்கிணைப்பாளர் பதவி, பிரதமர் வேட்பாளர் குறித்து எல்லாம் எனக்கு கோபமோ, அதிருப்தியோ எதுவும் இல்லை என்றார்.
இதனைத் தொடர்ந்து நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், 1977-ல் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்தன. அப்போது யாரும் மொரார்ஜி தேசாய்தான் பிரதமர் வேட்பாளர் என்றெல்லாம் சொல்லவில்லை. தேர்தலில் வென்ற பின்னர் அனைவரும் சேர்ந்து பிரதமர் யார் என முடிவு செய்யலாம். ஆகையால் 2024-ம் ஆண்டு தேர்தலை ‘இந்தியா’ கூட்டணியும் பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு செய்யாமலே தேர்தலை சந்திக்கலாம் என்றார் சரத்பவார்.