வெளிநாட்டில் இருந்து விஜயிடம் போனில் பேசிய கமல் ஹாசன்.., கட்சி குறித்து அவர் பேசியது என்ன?
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கட்சி தொடங்கிய விஜய்
தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி பல ஆண்டுகளாக இருந்தது.
இந்நிலையில் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக நேற்று அறிக்கை வெளியிட்டார். குறிப்பாக அவர் தனது அறிக்கையில், “வரும் 2026 சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு” என்று கூறியுள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் பிரமுகர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
தொலைபேசியில் கமல்
அந்தவகையில், நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தனது வாழ்த்தினை தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில், “வெளிநாடு சென்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்தார். இன்று எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுக்களும், வரும் 2026-ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துகளும்” என்று கூறப்பட்டுள்ளது.