400 ரன்கள் கூட அடிக்கலையா.. இது அந்த 3 பேட்ஸ்மேன்களுக்கே பத்தாதே.. குஷியான இங்கிலாந்து அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்கள் சேர்த்திருந்தது. இதையடுத்து 2ஆம் நாள் ஆட்டத்தை இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் – அஸ்வின் இருவரும் தொடங்கினர். ஜெய்ஸ்வால் 179 ரன்களுடன் களமிறங்கியதால், அவர் இரட்டை விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில் தொடக்கம் முதலே பவுண்டரிகள் மூலம் ரன்கள் சேர்க்கப்பட்டு வந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து அதிரடியாக சிக்ஸ் மற்றும் பவுண்டரியை அடுத்தடுத்த பந்துகளில் விளாசி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை விளாசினார் ஜெய்ஸ்வால். 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் இடதுகை பேட்ஸ்மேன் ஒருவர் இரட்டை சதம் அடித்துள்ளார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 209 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த பும்ரா 6 ரன்களிலும், முகேஷ் குமார் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலமாக இந்திய அணி 396 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணியின் பேட்டிங்கில் ஜெய்ஸ்வாலை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனும் 35 ரன்களை கூட சேர்க்கவில்லை. ஒற்றை ஆளாக இந்திய அணியை ஜெய்ஸ்வால் கரை சேர்த்துள்ளார்.
ஆனால் விசாகப்பட்டினம் மைதானத்தின் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், 396 ரன்கள் போதாது என்று பார்க்கப்படுகிறது. 450 ரன்கள் எடுத்திருந்தால் இங்கிலாந்து அணியை சமாளித்திருக்க முடியும் என்று நேற்றே கருத்துகள் எழுந்த நிலையில், இந்திய அணி 400 ரன்களை கூட எட்டாமல் ஆட்டமிழந்துள்ளது. 2வது நாள் ஆட்டத்தில் வெறும் 60 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இங்கிலாந்து அணியின் டக்கெட், போப் மற்றும் ரூட் ஆகியோரை வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தப்பிக்க முடியும். இதில் ஒருவரை சதமடிக்கவிட்டாலும், இந்திய அணியின் பாடு திண்டாட்டம் தான். இதனால் இந்திய பவுலர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.