IPL 2024 : தோனி, சிஎஸ்கே அணிக்கு கடும் அழுத்தம்? ஆபீஸுக்கு வந்த அமலாக்கத்துறை.. உண்மை என்ன?
கடந்த புதன் மற்றும் வியாழன் (ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1) அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசனின் முதன்மை நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் விசாரணை நடத்தி இருக்கின்றனர். இது ஒரு வகையில் அடுத்த மாதம் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அழுத்தம் கொடுக்குமா? என்ற விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
முதலில் இது அமலாக்கத்துறை ரெய்டு என தகவல் வெளியான நிலையில், அந்த அளவுக்கு பெரிய ரெய்டாக இல்லாமல், சாதாரண விசாரணையாகவே இது நடந்தது என தற்போது இந்தியா சிமெண்ட்ஸ் அளித்த விளக்கம் மூலம் தெரிய வந்துள்ளது. அந்நிய செலாவணி பரிமாற்றத்தில் இருக்கும் விதிமீறல் குறித்து விசாரிக்கவே அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்தியா சிமெண்ட்ஸ் அலுவலகத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. சென்னையில் இருக்கும் தலைமை அலுவலகத்துக்கும், டெல்லியில் இருக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் அலுவலகத்துக்கும் இரண்டு நாட்களாக அதிகாரிகள் சென்றனர்.
இந்த விவரம் புதன் கிழமை அன்று செய்திகளில் வெளியானதை அடுத்து பங்குச் சந்தையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை பிப்ரவரி 2 க்குள் சுமார் ரூ.20.40 அளவுக்கு குறைந்தது. இந்த ஒரு விசாரணை செய்தியால் 632 கோடி அளவுக்கு மொத்த பங்குகளின் விலை குறைந்துள்ளது. இது அந்த நிறுவனத்துக்கு பெரும் இழப்பாகும்.
இதன் பின்னணியில் தோனி இருக்கலாம் என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது. சமீபத்தில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு தோனி செல்லவில்லை என்பதற்கும், இந்த விசாரணைக்கும் முடிச்சுப் போட்டு அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி இருக்கின்றனர். 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு ஏதேனும் அழுத்தம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.