பொசுக்கு முடிவெடுத்த அமெரிக்கா.. சோகத்தில் ஐடி ஊழியர்கள்..!!
அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை (USCIS) அமைப்பு விசா விண்ணப்பங்கள் மற்றும் பதிவுக் கட்டணங்களின் திருத்தப்பட்ட புதிய கட்டணங்களை இறுதி செய்துள்ளது. ஜனவரி 31 புதன்கிழமை வெளியிடப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (DHS) அறிக்கையில் கட்டண உயர்வுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தப் புதிய விதியின்படி, H-1B விசா பதிவுக் கட்டணம் 2050% அதிகரித்துள்ளது. USCIS மற்றும் DHS அறிவிக்கப்பட்ட குடியேற்றச் சேவைகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பதிவுக் கட்டணங்களின் முழு விபரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
அமெரிக்க அரசின் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் இந்த வருடம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனாலேயே காத்திருப்புக் காலம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
இந்திய மக்கள் அதிகம் பயன்படுத்தும் அமெரிக்க விசாவில் H-1B, L-1 மற்றும் EB-5 ஆகியவை மிகவும் முக்கியமானது. இதுதான் வேலைவாய்ப்புக்காகவும், நேரடியாக முதலீடு செய்து குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யும் விசா வகைகளாகும்.
H-1B விசா பதிவுக் கட்டணம் 2050% அதிகரித்துள்ள நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய பதிவு கட்டணமாக 215 டாலராக உள்ளது. இது தற்போதைய 10 டாலர் கட்டணத்தை ஒப்பிடுகையில் வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.
தற்போதைய L-1B விசா கட்டணம் 460 டாலராகும், இது 1,385 டாலராக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், முதலீடு, தொழில் துவங்குவது மூலம் பெறப்படும் குடியுரிமை அடங்கிய EB-5 விசாக்களுக்கான கட்டணம் 3,675 டாலரில் இருந்து 11,160 டாலராக உயர்ந்துள்ளது.
மேலும் இந்த வருடம் ஹெச்1பி விசா பதிவு எண்ணிக்கை 424,400 ஆக உயர வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 4 ஆம் தேதி வெளியான கணிப்பில் 273,990 விண்ணப்பங்கள் வரலாம் எனக் கணிக்கப்பட்ட நிலையில், இதைத் திருத்தி எழுதியுள்ளது அமெரிக்காவின் DHS அமைப்பு.
இதில் ஐடி ஊழியர்கள் சோகத்தில் மூழ்க என்ன காரணம்..? இருக்கு பாஸ். முன்பு ஹெச்1பி விசா பெற வேண்டுமெனில் 10 டாலர் கொடுத்து ரிஜிஸ்டர் செய்தால் போதுமானது, இதனால் ஐடி நிறுவனங்கள் லாட்டரியில் விசா கிடைக்கிறதோ இல்லையோ ஊழியர்களைத் தக்க வைக்க விசா ரிஜிஸ்ட்ரேஷன் செய்வார்கள் காரணம் 10 டாலர் தானே என்பதால்.
ஆனால் இப்போது 215 டாலர், கிட்டதட்ட 17000 ரூபாய், உங்க நிறுவனம் 17000 ரூபாய் செலவு செய்து 424,400 விண்ணப்பத்தில் 60000 பேருக்கு விசா கிடைக்கும் விண்ணப்பம் செய்யுமா என்பதை யோசித்துக்கொள்ளுங்கள்.
இதனால் ஐடி நிறுவனமும் இனி போலியாக வாக்குறுதிகளைக் கொடுப்பது பெரிய அளவில் குறையும், உண்மையிலேயே திறமையான ஊழியர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பை கொடுக்கும்.