எத்தனாலில் ஓடக்கூடிய பல்சர் பைக்!! பஜாஜின் புது கண்டுப்பிடிப்பு… இதுக்கு தானே காத்துக்கிட்டு இருந்தோம்!
பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2024 (Bharat Mobility Global Expo 2024) கண்காட்சியில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் ஃபிளெக்ஸ் ஃப்யுலில் இயங்கக்கூடிய பல்சர் மற்றும் டோமினார் பைக்குகளை காட்சிப்படுத்தி உள்ளது. இந்த புதிய பஜாஜ் பைக்குகளை பற்றிய விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.
பாதுகாப்பான & பசுமையான போக்குவரத்தை கொண்டுவரும் முயற்சியாகவும், நாட்டின் தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்புகளை மேம்படுத்தும் முயற்சியாகவும் பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2024 என்கிற நிகழ்ச்சி மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த பிப்.1ஆம் தேதி துவங்கிய இந்த கண்காட்சி இன்று (பிப்.3) வரையில் நடைபெற உள்ளது.
அட்வான்ஸான தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்புகள் மூலம் பார்வையாளர்களை கவர்ந்துவரும் இந்த கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்று தனது உரையை வழங்கினார். இந்த கண்காட்சியில் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சார்பில் புதிய தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த வகையில், பஜாஜ் ஆட்டோ தனது ஃபிளெக்ஸ் ஃப்யுல் பைக்குகளை காட்சிப்படுத்தி உள்ளது.
இந்தியாவின் முன்னணி 2-வீலர் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான பஜாஜ் ஆட்டோ அதன் பிரபலமான பல்சர் மற்றும் டோமினார் பைக்குகளை ஃபிளெக்ஸ்-ஃப்யுல் டெக்னாலஜி உடன் காட்சிப்படுத்தி உள்ளது. இந்த கண்காட்சியில், பல்சர் என்160 மற்றும் டோமினார் 440 பைக்குகளில் ஃபிளெக்ஸ்-ஃப்யுல் டெக்னாலஜி பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலமாக, இந்த பைக்குகளை எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்க வைக்க முடியும் என பஜாஜ் தெரிவித்துள்ளது. எத்தனால் கலக்கப்பட்டே நாடு முழுவதும் தற்சமயம் பெட்ரோல் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும், தற்போதைக்கு 90% பெட்ரோல், 10% எத்தனால் என்கிற விகிதத்திலேயே விநியோகம் செய்யப்படுகிறது.
ஆனால், தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்சர் மற்றும் டோமினார் ஃபிளெக்ஸ் ஃப்யுல் பைக்குகளில் 27.5% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை பயன்படுத்தலாமாம். எத்தனாலின் பயன்பாடு அதிகரிக்க, அதிகரிக்க பெட்ரோலின் பயன்பாடு குறையும். இதன் மூலமாக, வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை வாங்கப்படுவது குறையும் என்பதால், இவ்வாறான ஃபிளெக்ஸ் ஃப்யுல் வாகனங்களை மத்திய அரசு வெகுவாக ஊக்கப்படுத்துகிறது.
இந்த ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக்குகளுடன், பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2024 கண்காட்சியில் சேத்தக் பிரீமியம் எலக்ட்ரிக் மற்றும் குட் சிஎன்ஜி என பெட்ரோலுக்கு பதிலாக வேறு எரிபொருள்களில் இயங்கும் வாகனங்களையும் பஜாஜ் ஆட்டோ காட்சிப்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் சர்மா, “இந்த பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவில் பங்கேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி, கொள்கை வகுப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் கூட்டு பணியாளர்கள் போன்ற அனைத்து பங்குத்தாரர்களுக்கும் எங்களின் சில புதுமையான மொபைலிட்டி தீர்வுகளை காட்சிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்தியா மற்றும் 90க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக எங்கள் தொழிற்நுட்பம் மற்றும் உற்பத்தி திறன்கள் பயன்படுத்தப்படுகின்றன” என்றார்.