உத்தராகண்ட் பொது சிவில் சட்ட வரைவில் புதிய சர்ச்சை! நீதி தேவதையின் சிலையில் மாற்றம் ஏன்?

உத்தராகண்ட்அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பொது சிவில் சட்டத்தின் வரைவின் முகப்பில் உள்ள நீதி தேவதை சிலையின் புகைப்படம், கண்கள் மூடப்பட்ட நிலையில் இல்லாதது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நீதி தேவதையின் சிலையில் கண்கள் மூடப்பட்டிருப்பது, பாரபட்சமற்ற தன்மை மற்றும் சார்பின்மையை குறிப்பதாக்க் கருதப்படும் நிலையில், நீதி தேவதையின் கண்கள் மூடாமல் இருப்பதே பாரபட்சமின்மை மற்றும் சார்பின்மையைக் குறிக்கும் வலுவான குறியீடாக இருக்கும் என்று உத்தராகண்ட் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தராகண்ட் மாநில அரசால் நியமிக்கப்பட்ட குழு வெள்ளிக்கிழமை முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் சமர்ப்பித்த பொது சிவில் சட்ட வரைவு ‘ஒற்றுமை மூலம் சமத்துவத்தை வளர்ப்பது’ என்ற தலைப்பில் உள்ளது.

பொது சிவில் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியான திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும் பரம்பரைச் சட்டங்களுக்கான சட்ட கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி பொது சிவில் சட்டத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். நாடு இரண்டு விதமான சட்டங்களின் கீழ் இயங்க முடியாது என்றும் வெவ்வேறு விதிகளைக் கொண்டு செயல்பட முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பொது சிவில் சட்டம் விரைவாக செயல்படுத்த உத்தரகாண்ட் மாநில அரசு முனைப்பு காட்டுகிறது. இந்தச் சட்டத்தை இயற்றுவதற்காக சட்டசபையின் நான்கு நாள் சிறப்புக் கூட்டத்தொடர் பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 8 வரை நடைபெற உள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டம் அமலுக்கு வந்தால், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறும். அசாம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல பாஜக ஆளும் மாநிலங்களும் இந்தச் சட்டத்தைக் கொண்டுவர தயாராக உள்ளன. இதே போன்ற சட்டம் போர்த்துகீசிய ஆட்சியின் கீழ் இருந்த கோவாவில் மட்டும் இப்போது உள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என பாஜக கூறியிருந்தது. அதன்படி, உத்தரகாண்ட் மாநில அரசு பொது சிவில் சட்ட வரைவை தயாரிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவை மே 2022 இல் அமைத்தது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான இந்தக் குழு தனது அறிக்கையை அளிப்பதற்கான கால அவகாசம் நான்கு முறை நீட்டிக்கப்பட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *