தை மாதம் 2024 : தை மாதத்தின் சிறப்புகள் பற்றி தெரியுமா? முக்கிய விசேஷங்கள் என்னென்ன?
ஒவ்வொரு மாதத்திற்கும் பல தனிச்சிறப்புகளை கொண்டுள்ளன. அந்த வகையில் தை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப தை மாதத்தில் பல சிறப்பு விசேஷங்கள் கொண்டாடப்படுகின்றன. அதன்படி தை முதல் தொடங்கி 4 நாட்கள் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.தை முதல் நாளை அறுவடை திருநாளாகவும் சூரியனுக்கு நன்றி சொல்லும் நாளாகவ்வும், தை 2-ம் நாள் விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கலாக கொண்டாடப்படுகிறது.
சூரியனின் பாதை வடதிசையில் மாறும் உத்தராயண காலத்தின் ஆரம்பமே தை மாதத்தின் முதல் நாளாகும். இது ஆன்மீக ரீதியில் மிகவும் புண்ணியமான காலம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தை மாதத்தில் தைப் பொங்கல், தை பூசம், தை கிருத்திகை, தை அமாவாசை, போன்ற சிறப்பு விஷேங்கள் வருகின்றன. அந்த வகையில் தை மாதத்தின் சிறப்புகள் குறித்தும், முக்கிய விசேஷங்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
தைப்பூசம்
தை மாதத்தில் வரும் பௌர்ணமி உடன் பூசம் நட்சத்திரம் சேர்ந்து வரும் நாள் தை பூசமாக கொண்டாடப்படுகிறது. அசுரர்களை அழிக்க முருகனுக்கு அன்னை பார்வதி தேவி வேல் வழங்கிய நாள் தான் தைப்பூச நாளாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் தைப்பூசம் கடந்த 25-ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தை அமாவாசை 2024 :
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினம் வந்தாலும் தை மாதத்தில் வரும் தை அமாவாசை மிகவும் சிறப்பான விரதம் ஆகும். ஒரு ஆண்டின் 3 முக்கிய அமாவாசை திதிகளில் தை அமாவாசையும் ஒன்று.. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆண்டின் மற்ற அமாவாசை திதிகளில் தர்ப்பணம் செய்யவில்லை என்றாலும் இந்த தை அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசியை பெறலாம் என்பது ஐதீகம். அந்த வகையில் வரும் 9-ம் தேதி தை அமாவாசை விரதம் அனுசரிக்கப்படுகிறது.
தை மாதம் 2024 : ரத சப்தமி
தை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி, ரத சப்தமி என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சூரியனை வழிபடுவதற்கு உகந்த நாளாகும். இந்த ரத சப்தமி நாளில் விரதம் இருந்தால் உடலில் உள்ள நோய்கள் நீங்கி, குழப்பங்கள் அனைத்தும் நீங்கும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டு ரத சப்தமி வரும் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
வீர பத்ர வழிபாடு
வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வீர பத்ரர் வழிபாடு செய்ய வேண்டும். இது ஒராண்டு முழுக்க செய்ய வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் ஆண்டு முழுக்க வீர பத்ர வழிபாடு செய்ய முடியாதவர்கள் தை மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்தால் அனைத்து தடைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.
தை வெள்ளி :
தை மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. தை வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறும். தை வெள்ளிக்கிழமைகளில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி போன்ற அம்மன் பாடல்களை பாடி வழிபாடு செய்யலாம்.
புத்ரதா ஏகாதசி:
தை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி புத்ரதா ஏகாதசி எனவும் சந்தான ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஏகாதசி விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.