விற்பனையில் சாதனை படைக்கும் மாருதி சுசூகியின் Fronx கார்… அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்கு?
இந்தியாவின் முன்னனி வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் SUV காரான Fronx க்ராஸ் ஓவர் விற்பனையில் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகமான Fronx கார், அதற்குள் ஒரு லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே விரைவாக விற்பனையாகும் கார்களில் ஒன்று என்ற சிறப்பையும் Fronx பெற்றுள்ளது. இந்நிலையில் இதன் விற்பனையை இன்னும் அதிகரிக்கும் விதமாக Fronx மாடல்களில் சில மாற்றங்களை செய்யவுள்ளது மாருதி நிறுவனம்.
இந்திய வாடிக்கையாளர்களிடம் எந்தளவிற்கு Fronx கார் வரவேற்பு பெற்றுள்ளது என்பதற்கு அதன் விற்பனை எண்ணிக்கையே சாட்சி. இந்திய சந்தையில் மக்களின் விருப்பத்திற்குரிய கார் என்ற இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது Fronx. 1.2 லிட்டர் K12C பெட்ரோல் இஞ்சின், CNG வேரியண்ட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்சின் என பல வகையான பவர்ட்ரைய்ன் ஆப்ஷன்கள் இருப்பதும் இந்தக் காரின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.
விற்பனையில் சாதனைகள் படைத்தாலும் Fronx டர்போ மாடல் சில சவால்களை சந்தித்து வருவதை கூறியே ஆக வேண்டும். இதற்கு முக்கிய காரணம் மற்ற பெட்ரோல் கார்களை விட இதன் விலை அதிகமாக இருக்கிறது. தற்போது டர்போ சார்ஜ் இஞ்சின் Delta+, Zeta மற்றும் Alpha ட்ரிம் மாடல்களில் கிடைக்கிறது. இதனால் விலையும் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. ஆகவே இதன் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும் சந்தையில் நிலவும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்சின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளது மாருதி நிறுவனம்.
தற்போது வரை Fronx காரில் ரெகுலர் பெட்ரோல் இஞ்சின் தான் அதிகமாக விற்பனையாகிறது. அதற்கடுத்து CNG 16 சதவிகிதமும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்சின் 7 சதவிகிதத்தையும் பிடித்துள்ளது. ஆரம்ப நிலை சிக்மா மாடலில் அதிக சக்திவாய்ந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்சினை அறிமுகப்படுத்துவதன் மூலம், அதிக வாடிக்கையாளர்களை பெற முடியும் என திட்டமிட்டுள்ளது மாருதி. இதன் மூலம் 25 முதல் 30 சதவிகித விற்பனை இலக்கை நிர்ணயித்துள்ளது மாருதி சுசூகி நிறுவனம்.
இதற்கிடையில் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் உச்சபட்ச மாடல்களான Zeta மற்றும் Alpha-ல் 1.2 லிட்டர் K12C பெட்ரோல் இஞ்சினை அறிமுகபடுத்தும் முடிவில் இருக்கிறது மாருதி நிறுவனம். மக்களிடம் இதற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். டர்போ இஞ்சின்கள் இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகிறது என்பதையும் இதில் முதலீடு செய்வதன் மூலம் பல மடங்கு பயன்களை பெற மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.