சட்டவிரோத திருமணத்தால் இம்ரான் கானின் 3வது மனைவி கைது! இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மூன்றாவது மனைவி சட்டவிரோத திருமணம் செய்ததாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது வழக்கில் தண்டனை
பிப்ரவரி 8ஆம் திகதி பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இம்ரான் கான் மூன்றாவது வழக்கில் தண்டனை பெற்றுள்ளார்.
அவர் புஷ்ரா பீபியை மூன்றாவது திருமணம் செய்தது சட்டவிரோதமானது என குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் தற்போது இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில் புஷ்ரா பீபியை இம்ரான் கான் கரம் பிடித்தார். ஆனால் புஷ்ராவின் முன்னாள் கணவரான Khawar Maneka, கடந்த ஆண்டு தனது மனைவி மறுமணம் செய்வதற்கு முன், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தேவையான மூன்று மாத இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை என குற்றம்சாட்டி இருவர் மீதும் வழக்கு தொடர்ந்தார்.
10 ஆண்டுகள் சிறை
இவ்வழக்கின் விசாரணை முடிவிலேயே தற்போது இம்ரான் கான், புஷ்ராவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது இம்ரான் கானுக்கு மூன்றாவது மற்றும் புஷ்ராவுக்கு இரண்டாவது தண்டனை ஆகும்.
ஏற்கனவே, பரிசாக வந்த பொருட்களை முறைகேடு செய்த வழக்கில் இம்ரான் கானும், புஷ்ரா பீபியும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர்.
அத்துடன் சைபர் கேபிள் முறைகேட்டில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.