தாபா ஸ்டைல் ‘சிக்கன் மசாலா’ – வீட்டிலேயே ஈஸியா தயார் பண்ணலாம்… செய்முறை இதோ!
சிக்கன் உணவுகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் தற்போது கிடைக்கும் விதவிதமான சிக்கன் உணவுகள் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. க்ரில் சிக்கன், கிறிஸ்பி சிக்கன், சிக்கன் டிக்கா, சிக்கன் தந்தூரி என பல விதமாக உள்ளது.
அதுவும் இவற்றில் மிகவும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுவது தாபா ரெஸ்டாரண்டில் தயாரித்து தரப்படும் சிக்கன் கிரேவி தான். ரொட்டி, சப்பாத்தி, நாண் அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையான தாபா ஸ்டைல் சிக்கன் மசாலாவை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
தேவையான அளவு :
கோழி – 500 – 600 கிராம் (பெரிய துண்டுகளாக வெட்டப்பட்டது)
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 4 – 5 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – தேவைக்கேற்ப
பிரிஞ்சி இலை – 2
பச்சை ஏலக்காய் – 4
கருப்பு ஏலக்காய் – 3
கிராம்பு – 5
இலவங்கப்பட்டை – 2
ஜாதிபாத்ரி பூ – 1
கருப்பு மிளகு – 10
சீரகம் – 1 டீஸ்பூன்
நட்சத்திர பூ – 1
தயிரில் சேர்க்க தேவையான பொருட்கள் :
தயிர் – 150 மிலி
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 2.5 டீஸ்பூன்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் ஒரு பௌலில் தயிரை ஊற்றி அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், காஷ்மீரி மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து தனியே வைத்து கொள்ளுங்கள்.
பிறகு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், மிளகு, ஸ்டார் பூ, சீரகம், ஜாதிபாத்ரி பூ, பிரிஞ்சி இலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி பிறகு சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
வெங்காயம் வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை மிதமான முதல் அதிக வெப்பநிலையில் மாற்றி மாற்றி வைத்து சுமார் 10-12 நிமிடங்களுக்கு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து அதன் பச்சை வாசனை போகும் வரை 2-3 நிமிடங்கள் குறைந்த தீயில் வதக்கி அடுப்பை அணைக்கவும்.
இது முற்றிலும் ஆறியதும் கலந்து வைத்துள்ள மசாலா – தயிர் கலவையைச் அதில் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.
ஒரு நிமிடத்திற்கு பின்னர் அடுப்பை ஆன் செய்து மிதமான தீயில் வைத்து கிளறி எண்ணெய் பிரியும் வரை மற்றொரு 2-3 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள கோழி துண்டுகளை போட்டு அதனுடன் 1/2 முதல் 3/4 டீஸ்பூன் உப்பு, கரம் மசாலா சேர்த்து கலந்து அதிக தீயில் வறுக்கவும்.
கிரேவியில் எண்ணெய் பிரிந்து வ்ரும்வரை சுமார் 7-8 நிமிடங்களுக்கு அதிகமான தீயில் சமைக்கவும்.
பின்னர் அதில் 250ML தண்ணீர் சேர்த்து சிக்கன் மென்மையாகும் வரை சுமார் 20 நிமிடங்கள் குறைந்த தீயில் மூடி சமைக்கவும்.
பின்னர் முடியை அகற்றி இரண்டு நிமிடங்களுக்கு மிதமான தீயில் சமைத்து பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் தாபா ஸ்டைல் ‘சிக்கன் மசாலா’ தயார்…
இதை நீங்கள் ரொட்டி, நாண் அல்லது சாதத்துடன் பரிமாறவும்.