ஜெயலலிதா என்னிடம் ரூ.2 கோடி கடன் கேட்டார்.. நினைச்சா கண்ணீர் வரும்.. ஓபிஎஸ் கூறிய பரபர தகவல்!
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்திய அதே நேரத்தில் கோவையில் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார் ஓபிஎஸ். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா, கட்சி நிதியில் இருந்து தன்னிடம் கடன் கேட்டதாக கூறியுள்ளார்.
அஇஅதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜக உடனான கூட்டணி முறிந்த பின்னர் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி முன்மொழிய, அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள், தீர்மானங்களை வழிமொழிந்தனர். இந்த தீர்மானங்களில் திமுக அரசைக் கண்டித்து 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளதோடு, மத்திய அரசையும் சாடியுள்ளார் ஈபிஎஸ்.
ஒரு பக்கம் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் பரபரப்பாக நடந்த நிலையில், கோவையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு ஆலோசனை குழு’ என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கோவை சூலூர் அருகே உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ்ஸால் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “சாதாரண தொண்டனாக இருந்த ஓபிஎஸ், நகர்மன்ற தலைவராக வந்திருக்க முடியுமா? எம்.எல்.ஏ ஆகியிருக்க முடியுமா? அமைச்சராகி இருக்க முடியுமா? முதலமைச்சராகி இருக்க முடியுமா? அதிமுகவின் இத்தனை ஆண்டு கால சரித்திரத்தில் 12 ஆண்டு காலம் கழகத்தின் பொருளாளராக இருந்தவன் நான் தான்.
என்னிடம் ஜெயலலிதா அந்த பொறுப்பைத் தந்தபோது 2 கோடி ரூபாய் பற்றாக்குறை இருந்தது. இரண்டே வருடத்தில் கட்சியின் நிதி 4 கோடி ஆனது. ஒருநாள் ஜெயலலிதா என்னை அழைத்து, எனக்கு தனிப்பட்ட முறையில் நிதி சுமை அதிகமாகிவிட்டது. ஏராளமான வழக்குகளை என் மீது போட்டிருக்கிறார்கள். வழக்கறிஞர்களுக்கு எல்லாம் பணம் தர வேண்டும் என்று கட்சி நிதியில் இருந்து 2 கோடி ரூபாய் தாருங்கள் என்று கேட்டார்.
உண்மையில் கண்ணீர் விட வேண்டிய நிகழ்வு அது. உடனே நான் 2 கோடி ரூபாயை வழங்கினேன். அந்த 2 கோடி ரூபாயை ஒரே மாதத்தில் திருப்பி அளித்தார் ஜெயலலிதா. இதுதான் வரலாறு. இன்றைக்கு எங்களை எல்லாம் வம்படியாக வெளியேற்றி விட்டு அவர்கள் பொதுக்குழுவை கூட்டி இருக்கிறார்கள்.” எனப் பேசியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதே நேரத்தில், அதிமுக பொதுக்குழுவில் வரவு செலவு கணக்கை, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தாக்கல் செய்தார். அதிமுகவிற்கு நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.261.80 கோடி உள்ளதாக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். மேலும், வங்கிகளில் அதிமுகவிற்கு உள்ள கையிருப்பு விவரங்களையும் வெளியிட்டார்.