ப்ரோமோஷன் பண்ணலாம் அதுக்காக செத்த மாதிரியா ? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
மாடலும் நடிகையுமான பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்துவிட்டதாக செய்தி பரவியது. அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே இந்த தகவல் வெளியானது. இதனால் இந்த தகவலை உண்மை என நம்பிய பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
பூனம் பாண்டே இறக்கவில்லை அவர் உயிருடன்தான் இருக்கிறார் எனும் வகையிலான கருத்துக்களும் பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் அதிகமாகி வருகிறது. அந்த வகையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்பட்டவர்கள் திடீரென இறப்பதில்லை.. உண்மையாகவே இறந்திருந்தால் அது பற்றி விசாரிக்க வேண்டும் எனும் வகையிலான பதிவுகளும் இணையத்தில் பதிவாகி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் இறந்ததாக செய்தி வெளியான இரண்டு தினங்களுக்கு முன்பு, மிகவும் தெம்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்ட நடிகை, திடீரென எப்படி இறக்கமுடியும்? ஒருவேளை, இறந்திருந்தால் அவரது உடல் எங்கே? எந்த மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்? அவரது குடும்பத்த்தினர் எங்கே? அவரது உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டது? போன்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.. அதனால் இது வதந்திதான்.. இது பப்ளிஸிடிக்காகவே செய்யப்படுகிறது எனவும் கூறுகிறார்கள் என்று நெட்டிசன்கள்.
இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவரது பட்ஜெட் உரையில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து பேசி இருந்தார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய்யை தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்கின்ற திட்டத்தையும் தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். இப்படி பட்ஜெட்டில் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து பேசிய அடுத்த நாளே பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் இறந்ததாக சொல்லப்பட்டது கண்டிப்பாக நாடகம்தான்.. ஏதோ பப்ளிசிட்டிக்காக மட்டுமே செய்யப்பட்டது என்ற கருத்துக்களும் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
இப்படியான கருத்துக்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே, தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்து, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதை செய்ததாக தெரிவித்துள்ளார்.
பூனம் பாண்டே தனது இன்ஸ்டா பதிவில் மேலும், “உங்கள் அனைவருடனும் முக்கியமான ஒன்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் – நான் இங்கே உயிருடன் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்னைக் கொல்லவில்லை. ஆனால் சோகமாக, அது ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றது.இந்த நோயை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாத பெண்கள் பலர் உள்ளனர். மற்ற சில புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது முற்றிலும் தடுக்கக்கூடியது. HPV தடுப்பூசி மற்றும் ஆரம்பகால கண்டறிதல் சோதனைகளில் முக்கியமானது.
யாரும் தங்கள் உயிரை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் நம்மிடம் உள்ளன. இந்த நோய் குறித்து தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். மேலும், ஒவ்வொரு பெண்ணும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வோம்.” எனத் தெரிவித்துள்ளார்.