ரூ.700க்கு புது கார் கேட்ட சிறுவன்!! ஆனந்த் மஹிந்திரா கொடுத்த கிஃப்ட்… மொத்த குடும்பமும் செம ஹாப்பி!
மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனத்தை ரூ.700க்கு கேட்ட நொய்டாவை சேர்ந்த சிறுவனுக்கு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தங்களது தொழிற்சாலையை சுற்றி பார்க்கும் வாய்ப்பை வழங்கி உள்ளார். இது தொடர்பாக ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவை இனி பார்க்கலாம்.
சில வாரங்களுக்கு முன்பு, உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் தான் வைத்திருந்த ரூ.700க்கு மஹிந்திரா தார் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தை விலைக்கு கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியது. தனது மழலை மொழியில், ஆனந்த் மஹிந்திராவை மென்ஷன் செய்து அந்த சிறுவன் பேசும் வீடியோவை நீங்களும் இணையத்தில் பார்த்திருப்பீர்கள்.
அந்த வீடியோவை கண்ட மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, “சீக்கு (அந்த சிறுவனின் பெயர்) ரூ.700க்கு தார் வாகனத்தை வாங்க முடியாது” என பதிலளித்தார். பின்னர் அந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, சிறுவன் சீக்குவை புனேவில் உள்ள மஹிந்திரா தார் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் சாகான் தொழிற்சாலையை நேரில் பார்வையிடுமாறு அழைப்பு விடுத்தார்.
இதன்படி தற்போது, சிறுவன் சீக்கு நொய்டாவில் இருந்து புனேவுக்கு வந்து மஹிந்திராவின் தொழிற்சாலையை நேரில் ஜாலியாக சுற்றிப் பார்த்துள்ளான். இதனையும் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான ஆனந்த் மஹிந்திராவின் எக்ஸ் பதிவில், “சீக்கு சாகானுக்கு (மஹிந்திரா தொழிற்சாலை உள்ள பகுதி) செல்கிறார்.
வைரலான வீடியோ முதல் ரியல்-லைஃப் அட்வென்ச்சர் வரை… இளம் தார் ஆர்வலரான சீக்கு, எங்களின் சாகான் ஆலைக்கு அவருடன் புன்னைகையையும், உத்வேகத்தையும் கொண்டுவந்தார். எங்களது சிறந்த பிராண்ட் தூதர்களில் ஒருவரை சுற்றிக் காட்டியதற்காக @ashakharga1 மற்றும் @mahindraauto குழுவுக்கு நன்றி!” என குறிப்பிடப்பட்டு உள்ளது.
அத்துடன், “ரூ.700க்கு தார் வாகனத்தை வாங்கி தரும்படி சீக்கு அவனது அப்பாவிடம் கேட்பதை இது தடுக்கும் என்று நம்புகிறேன்” என்றும் தனது எக்ஸ் பதிவில் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ 2.4 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உள்ளது. வீடியோவின் ஆரம்பத்தில், சீக்கு தனது அப்பாவிடம் ரூ.700க்கு மஹிந்திரா தாரை வாங்கி தரும்படி அடம்பிடிக்கும் அந்த பழைய வீடியோவின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதன்பின், புனேவில் உள்ள மஹிந்திராவின் சாகான் தொழிற்சாலையின் வாயிற்கதவுகளை சிறுவன் சீக்கு வந்தடையும் காட்சிகள் உள்ளன. மஹிந்திராவின் தொழிற்சாலைக்கு வந்த பின்பும் அடம்பிடிப்பதை நிறுத்தாத சீக்கு, ரூ.700க்கு மஹிந்திரா தாரை வாங்க முடியவில்லை எனில், குறைந்தப்பட்சம் தாரை பார்க்கலாம் என கூறியப்படி தொழிற்சாலைக்குள் நுழைவதை வீடியோவில் காணலாம்.
தொழிற்சாலைக்குள் நுழையும் சிறுவன் சீக்குவை அங்கிருந்த ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் தொழிற்சாலைக்குள் நுழைந்த சீக்குவுக்கு பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிவிக்கப்பட்டது. ஆனால், ஹெல்மெட்டினால் தனக்கு தலைவலி வருவது போல் இருப்பதாக அவன் கூறவே, கார் பார்ட்ஸ் அசெம்பிள் லைனுக்கு அவனை அழைத்துச் சென்றனர். அசெம்பிள் லைனில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் ஒன்றில் சீக்கு அமர்ந்து பார்வையிட்டான்.