ரூ.28 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர்… ஒரு காலத்தில் அமிதாப் பச்சனின் பட்டய கணக்காளர்… சுவாரஸ்ய வெற்றிக் கதை!

பலரும் அறியாத ஒருவரைப் பற்றியும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனோடு சேர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த மருந்து நிறுவனத்தை அவர் எப்படி கைப்பற்றி வளர்த்தெடுத்தார் என்பதையும் இன்று பார்க்கப் போகிறோம். பட்டய கணக்காளரான பிரேம்சந்த் கோதா ஒரு காலத்தில் அமிதாப் பச்சனின் வருமானங்கள், சொத்துகள் மற்றும் பிற கணக்குகளை கவனித்து வந்தவர்.
1975-ம் ஆண்டு அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தின் பிசினஸ் கூட்டாளியாக சேர்ந்தார் கோதா. இவர்கள் இருவரும் இணைந்து 1949-ம் ஆண்டு ஆங்கிலேயேர் ஒருவரால் தொடங்கப்பட்டு நஷ்டத்தில் இயங்கி வந்த மருந்து நிறுவனத்தை சொந்தமாக வாங்கினர். இப்கா லேபரடரிஸ் (Ipca Laboratories) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்நிறுவனம் தற்போது இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு எவ்வுளவு தெரியுமா? ரூ.28.000 கோடி.
விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பிரேம்சந்த் கோதா, இன்று இந்தியாவின் பணக்கார நபர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் தலைவராக இருக்கும் Ipca Labs நிறுவனத்தின் வருமானம் மட்டுமே அமெரிக்க டாலர் மதிப்பில் 711 மில்லியன் ஆகும். இந்நிறுவனம் தயாரிக்கும் டயாபடீஸ் மருந்துகள், மலேரியா காய்ச்சலுக்கான மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் இதய சிகிச்சை தொடர்பான மருந்துகள் பிரபலமாக இருக்கின்றன. மேலும் மருந்துகளை மொத்த ஆர்டராகவும் சப்ளை செய்கிறது இந்நிறுவனம்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கோதா, உள்ளூரிலேயே பள்ளிப் படிப்பை முடித்த கையோடு ராஜஸ்தான் பல்கலைகழகத்தில் வணிகவியல் பிரிவில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். பின்னர் தனது கடுமையான உழைப்பு மற்றும் திறமையால் பட்டய கணக்காளராக மாறினார். அமிதாப் பச்சன் பாலிவுட்டில் கோலோச்சுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவருடைய கணக்குகளை இவர்தான் சரி பார்த்து வந்தார். இந்த நட்பு காலப்போக்கில் இன்னும் நெருக்கமடைந்து பச்சனின் குடும்பத்தில் ஒருவராக மாறினார் கோதா. பின்னர் இவர்கள் இருவர் மற்றும் அமிதாபின் மனைவி ஜெயா பச்சன் ஆகியோர் இணைந்து Ipca நிறுவனத்தை சொந்தமாக வாங்கினர்.
1990-களில் கோதா நிறுவனத்தின் தலைவராக அமிதாப் பச்சனின் சகோதரர் அஜிதாப் பச்சன் இருந்தார். இந்நிலையில் 1999-ல் அமிதாப் பச்சனின் குடும்பத்தினர் கடுமையான நிதிச் சுமையில் சிக்கவே வேறு வழியின்றி Ipca நிறுவனத்தில் உள்ள தங்களது பங்குகளை விற்றனர்.
அன்றோடு அமிதாப் பச்சனின் குடும்பத்திற்கு நிறுவனத்தின் மீதிருந்த உரிமை பறிபோனது. அதன்பின்னர் நிறுவனத்தை பிரேம்சந்த் கோதா வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தி வருகிறார். இன்று Ipca நிறுவனத்தின் ஆண்டு வருமானம் மட்டுமே ரூ.4,422 கோடி ஆகும். ஒரு காலத்தில் சாதாரண பட்டய கணக்காளராக இருந்த பிரேம்சந்த் கோதா, இன்று தன்னுடைய 71 வயதில் ரூ.10,800 கோடி மதிப்புள்ள சொத்திற்கு அதிபதியாக உள்ளார்.