5 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத கெஜ்ரிவால் – நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை!
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் 5 முறை சம்மன் அனுப்பியும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், அமலாக்கத்துறை நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
டெல்லியில் மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பியது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தார்.
இந்தசூழலில் டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையை வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்தவுள்ளதாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனிடையே எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்ததாக பாஜக மீது கூறப்பட்ட புகார் தொடர்பாக 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காவல்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.எல்.ஏக்களை பாஜகவைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் கட்சியிலிருந்து விலக, 25 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.