அட்டகாசமான லுக்கில் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..! – லிஸ்ட் இதோ
இந்திய ஆட்டோமொபைல் துறை பயங்கரமான மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பெருக்கம். சுற்றுப்புறச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாத அதே சமயத்தில் அதிக செலவு வைக்காத பைக்குகளை நோக்கி மக்கள் நகர ஆரம்பித்துள்ளார்கள். அதன் விளைவுதான் தற்போது இந்திய சாலைகளில் எங்கு பார்த்தாலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காண முடிகிறது. எலெக்ட்ரிக் பைக் மீதான வரவேற்பு மக்களிடம் அதிகம் உள்ளதால், பல புதுமையான மாடல்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் இருப்பதோடு ஓட்டுவதற்கும் எளிதாக இருக்கிறது.
இந்நிலையில் இந்திய மார்க்கெட்டில் விரைவில் அறிமுகமாகவுள்ள சில முக்கியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
தரமான டூவீலர் உற்பத்தியாளர்கள் என்று பெயர் பெற்ற டிவிஎஸ் நிறுவனம், கூடிய விரைவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளது. இது iQube ST வேரியண்டாக இருக்கலாம் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் முற்றிலும் புதிய அம்சத்தில், விலை குறைவான, ஆரம்ப நிலை எலெக்ட்ரிக் பைக்குகளை மறுவரையரை செய்யக்கூடிய ஸ்கூட்டராகவும் இது இருக்கலாம்.
ஏதர் ரிஸ்தா (Ather Rizta)
இந்திய எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் முன்னனியில் திகழும் ஏதர் எனர்ஜி, தங்களது புதிய மாடலான ஏதர் ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசரை வெளியிட்டுள்ளது. குடும்பஸ்தர்களை இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் அதிக இடவசதி கொண்டிருப்பதுடன் ஸ்போர்டிவான ஏதர் 450X சீரிஸ் ஸ்கூட்டரை விட முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.
ஹோண்டா ஆக்டிவா அடிப்படையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் நுழையவுள்ளது. அனைவரின் நம்பிக்கையை பெற்ற ஆக்டிவா ஸ்கூட்டரின் அடிப்படையிலேயே இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அமைந்திருக்கும். அதிக ரேஞ்ச் வசதியும் தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் இந்த எலெக்ட்ரிக் பைக் இருக்கும் என கூறப்படுகிறது.
ஓலா ஸ்கூட்டர்
சமீபத்தில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு காப்புரிமை பதிவு செய்ததன் மூலம், தாங்களும் போட்டியில் இருப்பதை உணர்த்தியுள்ளது ஓலா ஸ்கூட்டர். வர்த்தக நோக்கத்திற்காக தயாரிக்கப்படும் இந்த ஸ்கூட்டரில் பேட்டரியை மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. சிறு வியாபாரிகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கும் என கூறப்படுகிறது.
சுசூகி பர்க்மேன் எலெக்ட்ரிக்
பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் இறங்கவுள்ளது சுசூகி. டோக்கியோ மோட்டார் நிகழ்ச்சியில் இந்த ஸ்கூட்டரின் முன்மாதிரியை காட்சிப்படுத்திய சுசூகி, பல முறை இதை இந்திய சாலைகளில் சோதனையோட்டம் செய்துள்ளது. அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிளாசிக் பர்க்மேன் ஸ்டைலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோ விடா (Hero Vida)
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனப் பிரிவான ஹீரோ விடா, இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கூடிய விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் ஒரு பைக் நடுத்தர விலையுள்ளதாகவும், இன்னொரு பைக் கொஞ்சம் விலை குறைவாகவும் இருக்கக் கூடும்.
பல முன்னனி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் இறங்கவுள்ள நிலையில், நகர்புற போக்குவரத்தை மாற்றியமைக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் துறையில் புதிய அலை அடிக்க ஆரம்பித்துள்ளது. ஸ்மார்ட்டான, பசுமையான, சுத்தமான வாகனங்களுக்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ள நிலையில், புதிதாக அறிமுகமாகவுள்ள எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சாலைகளின் நீடித்த எதிர்காலத்திற்கான ஒளி விளக்குகளாக திகழும்.