முற்றிலும் புதிய தோற்றத்தில் ரஜினிகாந்த்… கவனம் ஈர்க்கும் லால் சலாம் படத்தின் புதிய போஸ்டர்…
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி கவனம் பெற்று வருகிறது. ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்த திரைப்படம் வரும் வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதேபோன்று கடந்த 2017 ஆம் ஆண்டு சினிமா வீரன் என்ற டாக்குமென்டரி படத்தையும் ஐஸ்வர்யா இயக்கி இருக்கிறார். இந்நிலையில அவர் விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடித்துள்ள லால் சலாம் என்ற படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் இடம் பெற்று இருக்கிறார்.
லால் சலாம் படத்தில் விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா, தங்கதுரை ஆதித்யா மேனன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் இடம்பெற்றுள்ளார்.
ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள லால் சலாம் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மொத்தம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம் வரும் வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள லால் சலாம் படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. படம் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் உடன் விஷ்ணு விஷால், விக்ராந்த் இடம் பெற்றுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.