உக்கிரமா இருக்கும்.. தென் மாவட்டங்களில் மீண்டும் அதிகனமழைக்கு வாய்ப்பு! 3 நாட்கள் அலர்டா இருங்க
தென் மாவட்டங்களில் மீது அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரித்து உள்ளார்.
ராஸ்பி அலைவு கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிக்கு வருகை தந்துள்ளது. மேடன் ஜூலியன் அலைவு அடுத்த சில தினங்களில் மேற்கு இந்திய பெருங்கடல் பகுதிக்கு வருகை தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுமத்ரா பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து டிசம் 28 ஆம் தேதி வாக்கில் குமரிக்கடல் பகுதிக்கு வருகை தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஈரப்பதமிகுந்த கீழ்திசை காற்றின் காரணமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை மாவட்ட கடலோரத்தில் லேசான/மிதமான மழை துவங்கியுள்ளது. இன்று முதல் (28.12.2023) வரை மத்திய கடலோர மாவட்டங்களான மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் தினசரி மிதமானது முதல் சற்றே கனமழையும், கடலோரத்தின் ஒரு சில இடங்களில் கனமழையும் பதிவாகும்.
பிற கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் போன்ற உட்புற தமிழகத்தில் தற்போது மழை வாய்ப்பு குறைவு. ஒரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பதிவாகலாம்.
தீவிரமடையும் ஆறாம் சுற்று மழை: குமரிக்கடல் நோக்கி நகரும் காற்று சுழற்சி & ஈரப்பதமான காற்று குவிதல் காரணமாக டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் ஆறாம் சுற்று மழை தீவிரமடைய கூடும். 29.12.2023 முதல் 31.12.2023 வரை: தென்மாவட்டங்கள் & டெல்டா மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒருசில இடங்களில் மிககனமழை முதல் அதிகனமழை வரை பதிவாகும். குறிப்பாக மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, மணிமுத்தாறு, பாபநாசம் போன்ற நீர் பிடிப்பு பகுதிகளில் டிசம்பர் 29, 30 தேதிகளில் அதிகனமழை வாய்ப்பு உள்ளது.
தென் மாவட்டங்களில் கடந்த சுற்று போல பெருமழை வாய்ப்பு இல்லை என்றாலும், தற்போதைய நிலையில் கன/மிககனமழை பதிவானாலே பாதிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை என்பது தேவை. குற்றாலம், தேக்கடி, கழுகுமலை, சபரி மலை செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் டிசம்பர் 29 முதல் ஜனவரி 1 வரை உங்கள் பயணங்களை தள்ளி வைப்பது நல்லது. வங்க கடலில் புயல் உருவாக தற்போது ஏற்ற சூழல் இல்லை, அதேபோல டெல்டா & வட மாவட்டங்களில் அதித கனமழை/ பெருமழைப் பொழிவு பதிவாக தற்போது வாய்ப்பு குறைவு.
சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் வளிமண்டல மத்திய அடுக்கின் மேற்கு & கீழ் அடுக்கின் கிழக்கு காற்று குவிதல் காரணமாக ஜனவரி முதல் வாரத்தில் பரவலாக கனமழையும், ஒருசில இடங்களில் அதித கனமழையும் ஏற்படும். டெல்டாவில் மேகமூட்டம் ,மிதமான/ சாரல் மழை பூச்சி பாதிப்பை வரும் நாட்களில் அதிகப்படுத்தும். அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களுக்கும் வரும் கால மழை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.