புரோ கபடி லீக் – பிளே-ஆஃப் வாய்ப்பு.. தமிழ் தலைவாஸ்-க்கு ஆப்பு வைத்த குஜராத் ஜெயன்ட்ஸ்
2024 புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்றில் முக்கியமான போட்டியில் தமிழ் தலைவாஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் சந்தித்தன. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் பிளே-ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட பறிபோகும் என்ற நிலையில் களமிறங்கியது தமிழ் தலைவாஸ்.
ஆனால், போட்டியில் ரெய்டு மற்றும் தடுப்பாட்டத்தில் மொத்தமாக சொதப்பி 12 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது தமிழ் தலைவாஸ். ஆட்ட நேர முடிவில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 42 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் 30 புள்ளிகளும் எடுத்து இருந்தன.
இந்தப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர ரெய்டர்கள் நரேந்தர் 9 புள்ளிகளும், அஜின்க்யா பவார் 2 புள்ளிகளும் எடுத்து இருந்தனர். அஜின்க்யா பவார் ஆட்டம் தான் மிக மோசமாக இருந்தது. ஒரு வகையில் அதுவும் தோல்விக்கு காரணம் ஆனது. அதே சமயம், மாற்று வீரரான விஷால் சாஹல் 6 புள்ளிகள் பெற்று அசத்தினார். தமிழ் தலைவாஸ் அணியின் நரேந்தருக்கு பின் இந்தப் போட்டியில் அதிக புள்ளிகள் வென்றவர் விஷால் தான்.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் 40 புள்ளிகளுடன் பத்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது தமிழ் தலைவாஸ். இனி அந்த அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு 99.9 சதவீதம் முடிவுக்கு வந்து விட்டது. இந்தப் போட்டியில் வென்ற குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 18 போட்டிகளில் 55 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. குஜராத் அணி தனக்கு மீதமுள்ள நான்கு போட்டிகளில், மூன்றில் வென்றால் பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதியாகி விடும்.