2026 ஃபிஃபா உலகக்கோப்பை திருவிழா.. 16 நகரங்களில் 104 போட்டிகள்.. இறுதிப்போட்டி எங்கு தெரியுமா?
2026ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மெட் லைஃப் மைதானத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தவுள்ளன. 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 32 அணிகள் பங்கேற்ற நிலையில், 2026ஆம் ஆண்டு ஃபிஃபா தரப்பில் அதிக நாடுகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் 2026 உலகக்கோப்பையில் 48 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஜூன் 11ஆம் தேதி மெக்சியோவில் உள்ள அஷ்டக் மைதானத்தில் முதல் போட்டி நடக்கும் என்றும், ஜூலை 19ஆம் தேதி நியூ ஜெர்சியில் உள்ள மெட் லைஃப் மைதானத்தில் இறுதிப்போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 38 நாட்கள் நடக்கவுள்ள ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ என்று 16 நகரங்களில் நடத்தப்படவுள்ளது.
அதேபோல் அரையிறுதி போட்டிகளை அட்லாண்டா மற்றும் டாலஸில் நடத்தவும், 3வது இடத்திற்கான போட்டியை மியாமியில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் காலிறுதி போட்டிகளில் லாஸ் ஏஞ்சலஸ், கன்சாஸ் சிட்டி, மியாமி மற்றும் பாஸ்டன் ஆகிய நகரங்களில் நடக்கவுள்ளது. லீக் சுற்று உட்பட மொத்தமாக 104 போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பாக 1994 ஃபிஃபா உலகக்கோப்பை தொடர் அமெரிக்காவில் நடத்தப்பட்டது. அப்போது லாஸ் ஏஞ்சலஸ் அருகே உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடந்தது. தற்போது இறுதிப்போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள மெட் லைஃப் மைதானம் 2010ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. மொத்தமாக 82,500 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த மைதானத்தில் 2016ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா இறுதிப்போட்டி நடத்தப்பட்டது.