பட்ஜெட் முடிந்தது.. இந்த வாரம் எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம்? நிபுணர் பரிந்துரை

மத்திய இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து வெள்ளிக்கிழமை பங்குச்சந்தைகள் ஏற்றத்திலேயே முடிவடைந்தன. பட்ஜெட் அறிவிப்புகள், நாட்டின் பொருளாதாரம், வெளிநாடுகளின் பங்குச்சந்தை நிலவரங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வரும் வாரம் எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் என ஆக்சிஸ் செக்யூரிட்டிஸின் தொழில்நுட்ப பிரிவின் ஆராய்ச்சி தலைவர் ராஜேஷ் பால்வியா சில பரிந்துரைகளை தெரிவித்துள்ளார். அதனை விரிவாக பார்க்கலாம்.

பட்ஜெட் தினத்தில் இந்திய பங்குச்சந்தைகள் எதிர்பார்த்த உச்சத்தை எட்டவில்லை. எனினும் அடுத்த நாளான வெள்ளியன்று நிஃப்டி 22,100 புள்ளிகளை கடந்தது . பட்ஜெட் அறிவிப்புகள் மற்றும் பிற காரணிகளின் எதிரொலியால் நிஃப்டி புதிய உச்சத்தை அடைந்தது. இந்த நிலை நீடிக்குமா என முதலீட்டாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் இது நிச்சயம் நீடிக்கும் என்கிறார் ராஜேஷ் பால்வியா, வரும் வாரங்களில் நிஃப்டி 22,300 முதல் 22,500 வரை போகலாம் என்றும் தொடர்ந்து ஏற்றத்தில் தான் இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

எனவே நிஃப்டி முதலீட்டில் ஸ்டாப் லாஸை 21,650ஆக நிர்ணயம் செய்து வர்த்தகம் செய்யலாம் என அவர் பரிந்துரை செய்துள்ளார். அதே வேளையில் பேங்க் நிஃப்டி தற்போது சரிவில் இருப்பதாக தெரிந்தாலும் அது படிப்படியாக உயரும் என கூறியுள்ளார். பேங்க் நிஃப்டியில் ஸ்டாப் லாஸை 45,600ஆக நிர்ணயம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷ்னல் பேங்க்:

வரும் வாரத்தில் பஞ்சாப் நேஷ்னல் பேங்க் நல்ல ஏற்றம் காணும் வாய்ப்புள்ளது என அவர் கணித்துள்ளார். வெள்ளியன்று பஞ்சாப் நேஷ்னல் பேங்கின் ஒரு பங்கின் விலை ரூ.128.25 என 52 வார கால உச்சத்தை தொட்டது. இது தொடர்ந்து ஏற்றம் கண்டு, ஒரு பங்கின் மதிப்பு ரூ. 135 முதல் ரூ.140 வரை செல்லலாம் என கணித்துள்ளார்.

கோல் இந்தியா:

கோல் இந்தியாவும் வெள்ளியன்று பங்குச்சந்தையில் ஒரு பங்கின் விலை ரூ.422.90 என உச்சம் கண்டது. இது 52 வார கால உச்சபட்ச விலை. இதுவும் வரும் வாரங்களில் தொடர்ந்து ஏற்றத்தில் தான் இருக்கும் என கூறும் ராஜேஷ் பால்வியா, பவர் ஸ்டாக்ஸ் அனைத்துமே நல்ல ஏற்றம் கண்டு வருவதாக கூறுகிறார். கோல் இந்தியாவின் பங்கு மதிப்பு 433 வரை ஏறும் என கணித்துள்ளார்.

டாடா கன்சியூமர்ஸ்:

ராஜேஷ் பால்வியாவின் பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்திருக்கும் பங்கு டாடா கன்சியூமர்ஸ். வெள்ளிக்கிழமை இந்த பங்கின் விலை ரூ.1,132இல் இருந்து ரூ,1,170.70 என உயர்வு கண்டது. இது வரும் வாரத்தில் ரூ. 1200 வரை உயர வாய்ப்புள்ளது என்றும் அவர் கணித்துள்ளார்.

இது நிபுணரின் பரிந்துரை மட்டுமே முதலீட்டாளர்கள் பங்குகளை தேர்வு செய்யும் போது அனைத்து விவரங்களை ஆராய்ந்து முதலீடு செய்வது தான் சிறந்தது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *