தாலி கட்ட கொஞ்சம் நேரம்தான் இருக்கு.. மெட்ரோவில் பதற்றத்துடன் பயணித்த பெண்.. பெங்களூரில் நடந்த விநோத நிகழ்வு!

அதிக போக்குவரத்து நெரிசலுக்கு பெயர்போன இந்திய நகரங்களில் ஒன்றாக பெங்களூரு இருக்கின்றது. இங்கு அலுவலக நேரங்களில் வாகனங்களில் பயணிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நடந்து போனாலே பத்து நிமிஷத்தில் போய்விடலாம் என கூறும் அளவிற்கு அருகாமையில் இருக்கும் இடங்களுக்கு பயணிக்ககூட வழக்கமான நேரத்தைவிட மிக அதிகமான நேரத்தை நாம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

20 நிமிடங்கள் வரை கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அந்த அளவிற்கு மிக மோசமான போக்குவரத்து நெரிசலையே பெங்களூரு நகரம் கொண்டிருக்கின்றது. மேலும், மிக மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதன் காரணத்தினாலேயே பெங்களூரு வாசிகள் பலர் பொதுபோக்குவரத்தை பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர்.

குறிப்பாக, மெட்ரோ மற்றும் இஎம்யூ ரயில்களை மக்கள் அதிகம் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையிலேயே மணக் கோலத்தில் இளம் பெண் ஒருவர் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. மணக் கோலத்தில் இருக்காங்க இவங்க எதுக்கு ரயில்ல வராங்க, ஒருவேளை பப்ளிசிட்டிக்காக அவங்க இப்படி ரயில்ல டிராவல் பண்ணாங்களோ என்றெல்லாம் அவருடைய இந்த செயல் நம்முடைய மனதில் கேள்வியை எழுப்பச் செய்திருக்கின்றது.

ஆனால், உண்மையில் அவர் ஓர் மணப் பெண் ஆவார். பெங்களூருவின் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதன் காரணத்தினாலேயே அவர் மெட்ரோ ரயிலில் பயணித்திருக்கின்றார். தன்னுடைய கல்யாணத்திற்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும் என்கிற காரணத்திற்காகவே அவர் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி இருக்கின்றார்.

மணப்பெண் மட்டுமல்ல அவருடைய உறவினர்களும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதே மெட்ரோ ரயிலையே பயன்படுத்தி இருக்கின்றனர். இவர்கள் வந்த கார் மிக மோசமான டிராஃபிக்கில் சிக்கியதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே காரை வேறொரு இடத்தில் பார்க் செய்துவிட்டு அனைவரும் மெட்ரோவில் தங்களுடைய பயணத்தை தொடங்கி இருக்கின்றனர்.

இந்த நிகழ்வுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த வீடியோவை பார்த்த ஒரு சிலர் தங்களுடைய கண்டனங்களை எழுப்பி, எதிர்வினையாற்றி வருகின்றனர். அதேவேளையில், மணப் பெண்ணுக்கு ஒரு சிலர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். உரிய நேரத்திற்கு மண மேடையை அடைவதற்காக சிறிதும் தயக்கமின்றி மெட்ரோ ரயிலை பயன்படுத்தியதற்கே மணப் பெண்ணுக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுபோன்று விநோத நிகழ்வுகள் மெட்ரோ ரயில் சார்ந்து அரங்கேறுவது ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் மும்பை மெட்ரோவில் பெரும் கோடீஸ்வரரான நிரஞ்சன் ஹிரானந்தானி, நகரத்தின் மிக மோசமான போக்குவரத்தை நெரிசலை தவிர்க்க பயணித்தார். கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள் இருந்தபோதிலும் அவர் அவை அந்த நேரத்தில் பயனற்று போனதாக மாறின. மெட்ரோ ரயிலே அவருக்கு அந்த நேரத்தில் கை கொடுத்தது.

இதேபோல், பிரபல பாலிவுட் ஆக்டரான அக்ஷய் குமார்கூட மெட்ரோ ரயிலை பயன்படுத்தி இருக்கின்றார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லவே மெட்ரோ ரயிலை பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. இதுபோன்று இன்னும் பலர் மெட்ரோ ரயில்களை தங்களின் அவசர பயணங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் அதிகரித்துக் காணப்படும் போக்குவரத்து நெரிசலே இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *