மிடில்-கிளாஸ் கஸ்டமர்ஸை டார்க்கெட் செய்து ஸ்கோடா களமிறக்கும் புது கார்!! மாருதி, ஹூண்டாய்க்கு புது பிரச்சனை!
ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனம் இந்தியாவில் புதியதாக ஒரு காம்பெக்ட் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. முழுவதுமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ள இந்த புதிய ஸ்கோடா கார் தொடர்பாக நமக்கு கிடைக்கப்பெற்று உள்ள விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் எஸ்யூவி கார்களை வாங்கவே சமீப வருடங்களாக மிகவும் விரும்புகின்றனர். இதனாலேயே, கடந்த சில ஆண்டுகளில் இந்திய மார்க்கெட்டில் பல்வேறு விதமான எஸ்யூவி கார்கள் பல கார் நிறுவனங்களில் இருந்து வெளிவந்துள்ளன. ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும் 2021ஆம் ஆண்டில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குஷாக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது.
செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் ஃபோக்ஸ்வேகன் உடன் இணைந்து குஷாக் காரை உருவாக்கி இருந்தது. இந்த நிலையில், மற்றொரு புதிய எஸ்யூவி காரை ஸ்கோடா அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இது குஷாக்கை காட்டிலும் அளவில் சிறியதாகவும், விலை குறைவானதாகவும் இருக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால், மிடில்-கிளாஸ் மக்கள் பலரால் வாங்கக்கூடியதாக இந்த புதிய ஸ்கோடா கார் இருக்கும்.
ஹூண்டாய் வென்யூ, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் கார்களுக்கு விற்பனையில் போட்டியாக 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளத்தில் ஸ்கோடாவின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காராக இது இருக்கும். இதன் மூலமாக, சில வரி சலுகைகளையும் அரசாங்கத்திடம் இருந்து பெற ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பியுஸ் அரோரா கருத்து தெரிவிக்கையில், “உள்ளூர்மயமாக்கல் என்பது இந்த தயாரிப்புக்காக நாங்கள் எடுத்த முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். மேலும், சந்தை எதிர்பார்ப்பை நாங்கள் பின்னர் வெளியிடும் விலையுடன் பூர்த்தி செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
மேலும் பேசிய பியூஷ் அரோரா, “இந்தியா 2.0இல், நாங்கள் ஏற்கனவே 90% உள்ளூர்மயமாக்கலை அடைந்து விட்டோம் என்று கூறியிருந்தோம், அதையே இந்தியா 2.5க்கும் செய்ய விரும்புகிறோம்.” என கூறினார். பியூஷ் அரோரா கூறுவதை போல், புதிய இந்தியா 2.5 திட்டத்தில் வெளிவர முதல் ஸ்கோடா காராக இந்த சப்-காம்பெக்ட் எஸ்யூவி இருக்கும்.
ஏற்கனவே கூறியதுபோல், முழுவதுமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ள இந்த புது ஸ்கோடா கார் வெளிநாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த புதிய எஸ்யூவி காரை உற்பத்தி செய்யும் பணிகளை வருகிற 2025 ஜனவரி மாதத்தில் துவங்கப்படலாம்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார்கள் எம்.க்யூ.பி ஏ0 இந்தியா பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படுகின்றன. இந்திய மார்க்கெட்டிற்கென இந்த பிளாட்ஃபாரத்தை ஸ்கோடா & ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் இணைந்து வடிவமைத்தன. இதே பிளாட்ஃபாரத்தில் தான் புதிய சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரையும் ஸ்கோடா உருவாக்க உள்ளது. அதேபோல், குஷாக் காரில் இருந்து சில பாகங்கள் பெறப்பட்டு இந்த கார் உருவாக்கப்படும்.