தம்மா துண்டு ட்ரோன்.. இந்தியா வந்த கப்பல் ஆட்டம் காண வைத்த அட்டாக்! மீட்ட கடற்படை -நடந்தது என்ன?
இந்திய கடல் எல்லைப்பகுதியில் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான கெம் புளூட்டோ என்ற கப்பல் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை உதவியுடன் மும்பைக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு உள்ளது.
செங்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் செல்லும் பன்னாட்டு சரக்கு போக்குவரத்து கப்பல்கள் மீது தொடர்ந்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அரபிக் கடலில் சரக்கு கப்பல் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், அந்தக் கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
லைபீரிய நாட்டு கப்பலான எம்.வி. கெம் புளூட்டோ கப்பல் மீது அரபிக் கடலில் கடந்த சனிக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கப்பலுக்கும் இஸ்ரேலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் பிரிட்டனை சேர்ந்த கப்பல் போக்குவரத்து அமைப்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தாக்குதல் தொடா்பாக இந்திய கடற்படையினா் விசாரணையைத் தொடங்கினர். அதில் ஈரானில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் மூலமாகவே இந்த கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனின் செய்தித் தொடா்பாளா் கடந்த ஞாயிறு அன்று தெரிவித்தாா்.
அதே போல் செங்கடலில் பயணித்த கபோன் நாட்டுக்குச் சொந்தமான எம்.வி. சாய்பாபா சரக்கு கப்பல் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக எமன் நாட்டின் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக செல்லாமல் ஆப்பிரிக்காவை சுற்றி செல்ல முடிவு செய்து உள்ளன.
இந்த நிலையில் அரபிக் கடல், இந்திய பெருங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது குறிவைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட கெம் புளூட்டோ கப்பலை இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை வீரர்கள் நேற்று மீட்டு மும்பை துறைமுகத்திற்கு அழைத்து வந்து உள்ளன. அந்த கப்பலில் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சவுதி அரேபியாவில் இருந்து ரசாயணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் மங்களூரு துறைமுகம் நோக்கி வந்தபோது குஜராத் கடற்பகுதி அருகே இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கப்பல்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் போா்க் கப்பல்கள் அரபிக் கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அதேபோன்று தொலைதூர கண்காணிப்பு பணிகளுக்காக அதிநவீன விமானமான பி – 81 ஐயும் இந்திய விமானப் படை நிறுத்தி வைத்து உள்ளது.