வரும் 12-ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்..!
தமிழக அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ. 3,170 குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை களைய வலியுறுத்தி கடந்த 14 ஆண்டுகளாக ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இந்த கோரிக்கை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் நேற்று இடைநிலை ஆசிரியர்கள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் கோரி, வரும் 12-ம் தேதி முதல் சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.