பெரும்பான்மையை நிரூபிப்பாரா சம்பாய் சோரன்..? ஜார்க்கண்டில் உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு
ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனை, நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி கைது செய்தது. அதனைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா துணைத் தலைவர் சம்பாய் சோரன் பதவியேற்றார். 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கெடு விதித்துள்ளார்.
ஏற்கனவே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் 37 பேர், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர். இந்த நிலையில், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் பங்கேற்க ஏதுவாக, விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து அவர்கள் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு சென்றடைந்தனர்.
எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையுடன் இருப்பதாக கூறும் போது, அவர்களை ஐதராபாத்திற்கு இடம் மாற்றியது ஏன் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ., லோபின் ஹெம்ப்ரோம் விமர்சித்துள்ளார். ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 இடங்களில், ஒரு இடம் காலியாக உள்ளது. எனினும், தங்களுக்கு 47 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் படி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 29 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 16, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ML கட்சிக்கு தலா ஒரு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பாஜகவிற்கு 25 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மற்றொரு எம்.எல்.ஏ.வான லோபின் ஹெம்ப்ரோம், சம்பாய் சோரன் தலைமையிலான அரசுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனும் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஜார்க்கண்ட் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு அரசியல் ரீதியாக உற்று நோக்கப்படுகிறது.