கார் விபத்தில் நதியில் மூழ்கி மாயமான சைதை துரைசாமியின் மகன்… தேடுதல் பணி தீவிரம்
இமாச்சல பிரதேசத்தில் கார் விபத்தில் சிக்கி சட்லஜ் நதியில் மூழ்கி மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் காரில் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு தனது நண்பர் கோபிநாத்துடன் சுற்றுலா சென்றார். இருவரும் நேற்று மதியம் காசா நகரில் இருந்து சிம்லா நோக்கி இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தனர். உள்ளூரை சேர்ந்த தன்ஜின் காரை ஓட்டினார். இந்நிலையில், சட்லஜ் நதி வழியாக சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 200 மீட்டர் ஆழத்தில் உள்ள சட்லஜ் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் ஆற்றங்கரையோரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டு இருந்த கோபிநாத்தை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் மேல்சிகிச்சைக்காக சிம்லாவில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். விபத்தில் உயிரிழந்த ஓட்டுநரின் சடலத்தையும் மீட்பு குழுவினர் மீட்டனர்.
ஆனால், கார் விபத்துக்குள்ளானதில் இருந்து சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை மட்டும் காணவில்லை என்றும் அவரை மீட்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது என்றும் இமாச்சல பிரதேச போலீசார் கூறியுள்ளனர்.