என்ன செய்தார் எம்.பி? திருவள்ளூர் எம்.பி ஜெயகுமார் சாதித்தாரா? சறுக்கினாரா?

திருவள்ளூர் தொகுதியில் மின் விளக்குகள், குடிநீர் வசதி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு பணிகள் முடங்கி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சென்னைக்கு ஈடாக மிக வேகமாக வளர்ந்து வரும் மாவட்டம் திருவள்ளூர். கப்பல் கட்டும் துறைமுகம், மின் நிலையங்கள், கனரக வாகன தொழிற்சாலைகள் என முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் பல உள்ளன. திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, ஆவடி மற்றும் மாதவரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 1951 முதல் 1962 வரை நடைபெற்ற 3 தேர்தல்கள் வரை மக்களவை தொகுதியாயிருந்த திருவள்ளூர், பின்னர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இணைக்கப்பட்டது. 2008ல் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009 முதல் 2019 வரை நடைபெற்ற 3 தேர்தல்கள் என ஒட்டுமொத்தமாக 6 மக்களவைத் தேர்தல்களில் அதிக முறை வென்ற கட்சியே காங்கிரஸ் தான்.

காங்கிரஸின் கோவிந்தராஜுலு நாயுடு 2 முறையும், அதிமுகவின் வேணுகோபால் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை எதிர்த்து போட்டியிட்ட நிலையில், 55 % வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார் காங்கிரஸ் கட்சியின் கே.ஜெயக்குமார். அவர், 7 லட்சத்து 67 ஆயிரத்து 292 வாக்குகள் பெற்று மகுடம் சூடிய நிலையில், அதிமுகவின் வேணுகோபால் 4 லட்சத்து 10 ஆயிரத்து 337 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

3 லட்சத்து 56 ஆயிரத்து 955 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஜெயக்குமார், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் 87% வருகையை உறுதி செய்துள்ளார், நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 38 கேள்விகளை எழுப்பியுள்ள ஜெயக்குமார், வேலைவாய்ப்பு உள்ளிட்ட 29 விவாதங்களிலும் பங்கேற்று தொகுதி மக்களின் பிரச்னைகளை பேசியுள்ளார். தொகுதி முழுவதும் சாலை வசதி, உயர் கோபுர மின் விளக்குகள், குடிநீர் வசதி என எம்பிக்களுக்கான மத்திய அரசு நிதியான ரூ.17 கோடியில், 267 பணிகளுக்கு ரூ.15 கோடியே 35 லட்சத்து 21 ஆயிரம் செலவு செய்துள்ளார். மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் கும்மிடிப்பூண்டி, திருவாலங்காடு, திருவள்ளூர், மீஞ்சூர் உள்ளிட்ட ஒன்றியங்களில் 50% பணிகளை முடித்துள்ளார். தொகுதி முழுவதும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைத்துள்ளார். 12 ஆண்டுகளாக துவக்கப்படாமல் கிடந்த திருப்பாலைவனம் – மீஞ்சூர் சாலை பணியும் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளார்.

அதே நேரத்தில், பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார நடவடிக்கை எடுக்காதது, கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் மீஞ்சூர் ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்காதது, வேப்பம்பட்டு – செவ்வாப்பேட்டை ரயில் மேம்பால பணிகளை முடிக்காதது போன்றவை மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பேன் என்று கூறினாலும், அதை செயல்படுத்தாதது, மாதவரம் தொடங்கி ஆரம்பாக்கம் வரையிலான சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் பல ஆண்டுகளாக நீள்வது, அதில் சர்வீஸ் சாலையை சீரமைக்காததும், திருவள்ளூரில் சுரங்க நடைபாதை அமைக்காததும் மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *