எடை மேலாண்மைக்கு உதவும் பீர்க்கங்காய் வைத்து ஒருமுறை இப்படி கிரேவி செய்து பாருங்க.!
பீர்க்கங்காயில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. எனவே உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பீர்க்கங்காய் மஞ்சள் காமாலையை குணமாக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும். இப்படிப்பட்ட பீர்க்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நிச்சயம் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இப்படி பல மருத்துவ நன்மைகளை கொண்டுள்ள பீர்க்கங்காய் வைத்து வீட்டிலேயே எளிமையாக எப்படி ஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்த கிரேவி செய்யலாம் என்று இங்கே காணலாம்.
இந்த பீர்க்கங்காய் கிரேவியை நீங்கள் சப்பாத்தி, குஸ்கா, ரொட்டி வகைகள் மற்றும் புலாவுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
பீர்க்கங்காய் – 2
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கெட்டி தயிர் – 1 கப்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
சீராக தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – 1
கடுகு – டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை :
முதலில் பீர்க்கங்காயை நன்றாக அலசி அதன் தோலை சீவி நீக்கி கொள்ளவும்.
குறிப்பு : சீவி எடுத்த பீர்க்கங்காயின் தோலை தூக்கி எரியாமல் கொத்தமல்லி இலையுடன் சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட்டால் சுவை அப்படி இருக்கும்.
தோல் சீவிய பீர்க்கங்காயை தேவையான அளவு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, கடுகு, சீரகம் சேர்த்து கொள்ளவும்.
கடுகு மற்றும் சீரகம் நன்றாக பொரிந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து லைட்டாக பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ளவும்.
வெங்காயத்தை வதக்கும்போதே கருவேப்பிலையை சேர்த்துக்கொள்ளவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கிக்கொள்ளவும்.
அடுத்து அதனுடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும்வரை வதக்கிக்கொள்ளுங்கள்.
பின்னர் அதில் நறுக்கிவைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
தக்காளி நன்றாக மைய வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், காஷ்மீர் மிளகாய் தூள், சீராக தூள் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக அதன் பச்சை வாசம் போகும்வரை வதக்கிக்கொள்ளவும்.
அனைத்தும் நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வந்தவுடன் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து கொள்ளுங்கள்.
பீர்க்கங்காய் மசாலாக்களுடன் சேர்த்து நன்றாக கலந்து 3 நிமிடங்களுக்கு வதக்கிய பிறகு தீயை மிதமாக வைத்து பாத்திரத்தை மூடி ஒரு 4 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
குறிப்பு : மறக்காமல் இடை இடையே அடிபிடிக்க விடாமல் கிளறி விட்டுக்கொள்ளுங்கள்.
பீர்க்கங்காய் நன்றாக வெந்தவுடன் கெட்டியான தயிரை மிக்ஸி ஜாரில் போட்டு அடித்து அதனுடன் சேர்த்துகொள்ளுங்கள்.
பிறகு தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.
குறிப்பு : தண்ணீரின் அளவானது நாம் ஏற்கனவே சேர்த்த தயிரின் அளவு இருக்கவேண்டும்.
குறிப்பு : மேலும் உங்களுக்கு பால் பொருட்கள் அழற்சி என்றால் தயிருக்கு பதில் ஒரு கப் தேங்காய் பால் சேர்த்துக்கொள்ளலாம்.
அடுத்து அதில் கரம் மசாலா பொடியை சேர்த்து நன்கு கலந்து கிரேவியை மூடி மிதமான தீயில் ஒரு 5 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
பீர்க்கங்காய் நன்றாக வெந்து கிரேவியை எண்ணெய் பிரிந்துவரும் நேரத்தில் கஸ்தூரி மேத்தி கலந்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு அடுப்பை அணைக்கவும்.
அவ்வளவுதான் ஆரோக்கியம் நிறைந்த சுவையான ‘பீர்க்கங்காய் கிரேவி’ தயார்…