சிலியில் பொழிந்த சாம்பல் மழை… காட்டுத் தீயில் 99 பேர் பலி… அவசரநிலை பிரகடனம் செய்த அதிபர் போரிக்

மத்திய சிலியில் எரியும் காட்டுத் தீயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார்.

சிலி நாட்டின் கடலோர சுற்றுலாப் பகுதியான வால்பரைசோவில், கடுமையான கோடை வெப்ப அலை வீசிவருகிறது. கடந்த வார இறுதியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை உயர்ந்தது. இந்நிலையில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் அதிகாரிகளின் தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை குறைந்தது 99 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 32 பேர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக குயில்பூவில் நகரில் பேசிய அதிபர் கேப்ரியல் போரிக், வினா டெல் மார் அருகே காட்டுத்தீயால் பேரழிவிற்குள்ளான மலைப்பகுதியில் 64 பேர் பலியானதாகக் கணக்கிடப்பட்டதாகவும் அந்த எண்ணிக்கை நிச்சயமாக உயரக்கூடும் என்றும் கூறினார்.

2010ஆம் ஆண்டு சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் 500 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகு அந்நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பேரழிவு இது என்று போகிக் குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமை பிற்பகல் ஹெலிகாப்டரில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட அதிபர் போரிக், நாட்டில் அவசரநிலையைப் பிரகடனம் செய்வதாகவும் இதன் மூலம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.

அந்நாட்டின் தேசிய பேரிடர் சேவை அமைப்பான செனாப்ரெட், ஞாயிற்றுக்கிழமைக்குள் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கிட்டத்தட்ட 26,000 ஹெக்டேர் காட்டுப்பகுதி தீயில் கருகியுள்ளது. 31 தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள், சுமார் 1,400 தீயணைப்பு வீரர்கள், 1,300 ராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *