லால் சலாம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம ட்ரீட்.. படக்குழு அறிவிப்பு!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த சூப்பரான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது முன்னாள் கணவர் தனுஷை வைத்து த்ரீ படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். இது மட்டுமில்லாமல், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன் மேல ஆசைதான் பாடலையும், அப்படத்தில் ரீமாசென்னுக்கு டப்பிங் வாய்ஸும் கொடுத்திருந்தார்.
லால் சலாம்: தற்போது இவர், லால் சலாம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த்,மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது. இப்படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகி வரவேற்பை பெற்றது.
ரஜினிகாந்தின் சம்பளம்: இந்த படத்தில், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும், படத்தில் மொத்தம் ஒரு மணி நேரம் வரை வருவார் என்று கூறப்படுகிறது. மும்பை தாதா மொய்தீன் பாயாக நடித்துள்ள இவர், ஒரு பிரச்னையிலிருந்து விஷ்ணு விஷாலையும், விக்ராந்த்தையும் காப்பாற்றுவது போல் அவர் கதையில் பயணப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்த் 40 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
சூப்பர் அப்டேட்: கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள லால் சலாம் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் தற்போது படம் வரும் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 9ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் டிரைலரை காண காத்திருக்கின்றனர்.