அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடையை வாரி வழங்கும் பக்தர்கள்… எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?
அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடைகளை வாரி வழங்கி வருகின்றனர். நாள்தோறும் அங்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்து தரிசனம் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில், கடந்த மாதம் 22ஆம் தேதி குடமுழுக்கு மற்றும் கோவில் திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்ற இந்த விழாவில், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள், திரைப்பட பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து நாள்தோறும் பக்தர்கள் ராமர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 லட்சம் பேர் ராமர் கோயிலை தரிசிக்க வருகை தருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதே போன்று ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடைகளை அளித்து வருகின்றனர். கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் இம்மாதம் 1-ஆம் தேதி வரை ராமர் கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்களிடம் இருந்து ரூ. 8 கோடிக்கும் அதிகமாக நன்கொடை கிடைத்துள்ளது. இதேபோன்று ஆன்லைனிலும் பக்தர்கள் நன்கொடையை அளித்து வருகிறார்கள். ஆன்லைனில் மட்டும் சுமார் ரூ. 3.50 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.
ராமர் கோயிலில் சன்னிதிக்கு எதிரே உள்ள தரிசன பாதைக்கு அருகே 4 பெரிய நன்கொடை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதே போன்று நன்கொடை அளிப்பதற்கு 10 கணினி மயமாக்கப்பட்ட கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 2 முறையாவது 4 உண்டியல்கள் நிரம்பி விடுவதாக கோயிலை நிர்வகிக்கும் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறியுள்ளார்.
உண்டியலில் இருந்து பெறப்படும் நன்கொடையை எண்ணுவதற்கு மொத்தம் 14 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் வங்கி ஊழியர்கள். 3 பேர் கோவில் பணியாளர்கள். இந்த வங்கி ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் பணத்தை எண்ணி, அதனை ராமர் கோவில் அறக்கட்டளை அலுவலகத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். இந்த அனைத்து செயல்முறைகளும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.