Grammy Awards | ஷங்கர் மகாதேவன், ஜாகிர் உசேன் அங்கம் வகிக்கும் ஷக்தி இசைக்குழுவிற்கு கிராமி விருது
பாடகர் ஷங்கர் மகாதேவன் அங்கம் வகிக்கும் சக்தி இசைக்குழுவிற்கு சிறந்த இசை ஆல்பத்திற்கான கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.
66வது கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றது. இசை, ராக், பாப் நடனம் என 94 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில், இந்தியாவின் சக்தி இசைக் குழுவிற்கு சிறந்த இசை ஆல்பத்திற்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த இசைக்குழுவின் ’This Moment’ என்ற ஆல்பத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது.
பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவன், தபேலா கலைஞர் ஜாகீர் உசேன், கிதார் இசைக்கலைஞர் ஜான் மெக்லாக்லின், வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன், தமிழ்நாட்டை சேர்ந்த தாள கலைஞர் செல்வகணேஷ் ஆகியோர் இணைந்து உருவாக்கிய சக்தி ஆல்பத்தில் எட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
ஷங்கர் மகாதேவன், ஜாகீர் உசேன் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் கிராமி விருதை பெற்றுக்கொண்டனர்.
அப்போது பேசிய ஷங்கர் மகாதேவன், கடவுள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவை நினைத்து பெருமை கொள்வதாகவும், தனது மனைவிக்கு இந்த விருதை அர்ப்பணிக்க விரும்புவதாகவும் ஷங்கர் மகாதேவன் கூறினார். விருது பெற்ற சக்தி குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உலகளவில் சிறந்த இசைக்கான விருது உட்பட மூன்று பிரிவுகளில் தபேலா கலைஞர் ஜாகீர் உசேனுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆல்பம் விருது மிட்நைட் ஆல்பத்திற்கு வழங்கப்பட்டது. இதனை பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட் பெற்றுக் கொண்டார்.