சட்டப்படி 20 ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழும் நபர்: நாடுகடத்தப்படலாம் என அச்சம்

பிரித்தானியாவில் சட்டப்படி 20 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் நபர் ஒருவர், எப்போது வேண்டுமானாலும் தான் நாடுகடத்தப்படலாம் என்ற அச்சத்தில் வாழ்வதாக தெரிவித்துள்ளார்.

சட்டப்படி 20 ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழும் நபர்
போர்ச்சுகல் நாட்டவரான João Rocha Gonçalves Da Silva (45) என்பவர், 2001ஆம் ஆண்டு மே மாதம் பிரித்தானியாவுக்கு வந்துள்ளார். 2007 முதல், Domenic Tomeo (48) என்பவரது நிறுவனத்தில் ப்ளம்பராக வேலை செய்து வந்துள்ளார் João.

விடயம் என்னவென்றால், பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி வெளியேறியது. என்றாலும், பிரெக்சிட்டால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எதிர்கொள்ள தயாராவதற்காக 2020 டிசம்பர் 31 வரை ஒரு கால அவகாசம் கொடுக்கப்பட்டது, அது transition period என்று அழைக்கப்படுகிறது.

பிரெக்சிட்டுக்குப் பிறகும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரித்தானியாவில் தொடர்ந்து வாழ, பணியாற்ற வகை செய்யும் வகையில், EU settlement scheme என்ற திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது.

அதன்படி, தொடர்ந்து பிரித்தானியாவில் வாழவிரும்பும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள், 2021ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 30ஆம் திகதிக்குள் இந்த திட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் வாழ்வதற்காக விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஆனால், Joãoவால் குறிப்பிட்ட காலத்துக்குள் அத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கமுடியவில்லை.

காரணம் என்ன?
Joãoவால் குறிப்பிட்ட காலத்துக்குள் EU settlement scheme என்னும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கமுடியாததற்கு காரணம், முதலில் அவர் 2019ஆம் ஆண்டு அத்திட்டத்துக்கு விண்ணப்பித்தபோது, அவரது போர்ச்சுகல் நாட்டு அடையாள அட்டையை ஸ்கேன் செய்ய, அதில் ஏதோ பிரச்சினை இருப்பதாகக் கூறி, அந்த அட்டை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மீண்டும் புதிதாக ஒரு அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து, மீண்டும் EU settlement scheme திட்டத்துக்கு அவர் விண்ணப்பித்தபோதும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆகவே, João ஒன்லைனில் விண்ணப்பிக்க முயன்றுள்ளார். அதுவும் முடியவில்லை, கடைசியாக, தொலைபேசி மூலம் அவர் விண்ணப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், Joãoவுக்கு திக்குவாய்ப் பிரச்சினை உள்ளதுடன், ஆங்கிலம் அவரது முதன்மை மொழியாக இல்லாததாலும், அவர் பேசுவதை சம்பந்தப்பட்ட அலுவலரால் புரிந்துகொள்ளமுடியாமல் போயுள்ளது.

ஆகவே, தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியை நாடிய Joãoவால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் விண்ணப்பிக்க முடிந்துள்ளது.

ஆனால், அவர் கூறிய காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உள்துறை அலுவலகம் கூறிவிட, João நாடுகடத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. விடயம் என்னவென்றால், João மட்டுமல்ல, அவரைப்போலவே ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த சுமார் 58,000 பேர் பிரித்தானியாவை விட்டு வெளியேற்றப்படும் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *