ரஜினியின் ‘லால் சலாம்’ படத்துக்கு அடுத்த சிக்கல்.? வெளியிட தடையா? காரணம் இதுதான்!
மத அரசியல் காரணமாக லால் சலாம் படத்தை வெளிநாட்டில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யா இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். ரஜினியின் இந்த கௌரவ வேடம் காரணமாக லால் சலாம் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறியது. லைகா தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லால் சலாம் தயாராகியுள்ளது. கபில்தேவ் இதில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியான டீஸரிலிருந்து, விளையாட்டில் இரு மதங்களுக்கிடையிலான மோதல் படத்தில் பிரதானமாகப் பேசப்பட்டிருப்பது தெரிய வந்தது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா, ‘எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க.
அது எனக்கு வருத்தமா இருக்கு. அப்பா சங்கி கிடையாது’ என்றார். இதற்கு விளக்கமளித்த ரஜினி, ‘சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை’ என்றார். ஐஸ்வர்யாவின் பேச்சும், ரஜினியின் விளக்கமும் பேசுபொருளான நிலையில், லால் சலாம் அடுத்த சர்ச்சையில் சிக்கியது. கன்னட நடிகையான தன்யா பாலகிருஷ்ணன், 2012 இல் தமிழர்களை இழிவுப்படுத்தி சமூகவலைதளத்தில் பதிவொன்று போட்டிருந்தார். அவர்தான் லால் சலாமில் நாயகியாக நடித்துள்ளார்.
தமிழர்களை கொச்சைப்படுத்திய நடிகையை எப்படி லால் சலாமில் நடிக்க வைக்கலாம் என்று, தன்யா பால்கிருஷ்ணனின் 2012 பதிவின் ஸ்கிரீன் ஷாட்டுடன் சர்ச்சை வெடித்தது. இதற்கு பதிலளித்த தன்யா பாலகிருஷ்ணன், அந்தப் பதிவை தான் போடவில்லை என்றும், தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாகவும் கூறி, அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பிப்ரவரி 9 லால் சலாம் வெளியாகும் நிலையில், படம் தொடர் சர்ச்சைகளில் சிக்கி தலைப்புச் செய்தியானது. இந்நிலையில், லால் சலாம் படத்திற்கு குவைத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. கிரிக்கெட்டை மையப்படுத்திய படத்தில் இந்து – முஸ்லீம் மதப்பிரச்சனை பிரதானமாக இடம்பெற்றிருப்பதால் இந்த முடிவை அவ்வரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.