ஆட்டோபைலட் காருக்குள் வி.ஆர். ஹெட்செட் அணிந்து பயணிக்கும் டெஸ்லா டிரைவர்!
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லா தானியங்கி காரான ஆட்டோபைலட்டில் டெஸ்லா ஓட்டுநர் ஒருவர் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் அணிந்தபடி பயணிக்கும் வீடியோ அண்மையில் வெளியாகி கார் பிரியர்கள் மத்தியில் வைரலானது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட அந்த வீடியோவை முன்வைத்து அமெரிக்கப் போக்குவரத்துச் செயலர் பீட் புட்டிகீக் கூறிய இருக்கும் கருத்து கவனம் பெற்றுள்ளது. தானியங்கி காராக இருந்தாலும், எல்லா நேரங்களிலும் மனித ஓட்டுநர் ஒருவர் அதில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வெளியாகியிருக்கும் வீடியோவில் ஆட்டோபைலட்டில் பயணிக்கும் டிரைவர் விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டை அணிந்தபடி தனது சைகைகளால் காரை ஓட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவர் அணிந்திருக்கும் வி.ஆர். ஹெட்செட் ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிடப்பட்ட விஷன் ப்ரோ ஹெட்செட்டாக இருக்கலாம் என்று சிலர் கணிக்கின்றனர்.
லட்சக்கணக்கான நெட்டிசன்கள் பார்வையிட்டுள்ள இந்த வீடியோ குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள புட்டிகீக், “நினைவில் கொள்ளுங்கள். இன்று கிடைக்கும் அனைத்து மேம்பட்ட அமைப்புகளும் ஓட்டுநர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் ஓட்டுநர் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஆப்பிளின் விஷன் ப்ரோ ஹெட்செட் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த ஹெட்செட் வெளி உலகக் காட்சிகளுடன் முப்பரிமாண டிஜிட்டல் காட்சிகளையும் ஒருங்கிணைத்து காண உதவுகிறது. ஆனால், இந்த ஹெட்செட்டை ஒருபோதும் வாகனத்தை இயக்கும்போது பயன்படுத்தக்கூடாது என்றும் ஆப்பிள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.