2024இல் ரிலீசுக்கு ரெடியாக இருக்கும் புதிய எலக்ட்ரிக் கார்கள்… வெயிட்டிங்கில் இருக்கும் கார் பிரியர்கள்!
பசுமை இயக்கத்தை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில், இந்தியாவில் மின்சார வாகன (EV) விற்பனை 2023 இல் குறிப்பிடத்தக்க எழுச்சியைக் கண்டது. பத்துக்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடர்ந்து 2024ஆம் ஆண்டும் வரும் மாதங்களில் மேலும் புதிய கார்கள் அறிமுகமாக உள்ளன. அவற்றில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சில கார்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
மாருதி சுசுகி eVX எஸ்யூவி கார் ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தக் கார் 48 kWh மற்றும் 60 kWh என இரண்டு பேட்டரி வேரியண்ட்களுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 550 கிமீ தூரம் வரை செல்லும். 2024 இன் பிற்பகுதியில் இது வரும் என்று சொல்லப்படுகிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவி இ.8 2022ஆம் ஆண்டில் ஒரு கான்செப்ட் வெர்ஷனாக அறிமுகமானது. அப்போதிருந்து, சாலைகளில் பலமுறை சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த கார் 80 kWh பேட்டரியுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா ஹாரியர் EV ஜனவரி 2023 இல் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்தது. இப்போது இந்தக் கார் உற்பத்தியில் இருப்பதாகவும் 2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிடத் தயாராகி வருகிறது என்றும் தெரிகிறது. ஹாரியர் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷனுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் செல்லும் என்று ஊகிக்கப்படுகிறது.
டாடா கர்வ் டாடா நிறுவனத்தின் முக்கிய மாடல். அதை இப்போது மின்சார கார் பிரிவில் அறிமுகத உள்ளது. 2024ஆம் ஆண்டின் மத்தியில் இது அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறமு. பெரிய பேட்டரி கொண்ட இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 400-500 கிமீ வரை ரேஞ்ச் கொடுக்கும். 30.2 kWh பேட்டரியைக் கொண்டிருக்கும் டாடாவின் நெக்சானுடன் ஒப்பிடும்போது கர்வ் அதைவிட பெரிய பேட்டரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
மஹிந்திரா XUV300 EV டாடா நெக்ஸான் EVக்கு போட்டியாக இருக்கக்கூடும். XUV400 காரின் எலக்ட்ரிக் கார் மாடலைத் தொடர்ந்து, இப்போது XUV300 EV என்ற காரை அறிமுகப்படுத்த மகிந்திரா நிறுவனம் தயாராகி வருகிறது. இதன் வடிவமைப்பு XUV300 ஃபேஸ்லிஃப்ட் போல இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 39.4 kWh பேட்டரி கொண்ட XUV400 காருடன் ஒப்பிடும்போது இந்தக் காரில் சற்று சிறிய 35 kWh பேட்டரி இருக்கும் என்று தெரிகிறது.