“ரஜினிக்கு ஜோடியா… நம்பிக்கையில்லாம கையில் கிள்ளிப் பார்த்தேன்”- நடிகை நிரோஷா
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தது குறித்து நடிகை நிரோஷா சுவாரசியமான தகவல்களை செய்தியாளர் சந்திப்பின்போது பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் விக்ராந்த், செந்தில், ஜீவிதா, தம்பி ராமையா, அவந்திகா சனில்குமார், விவேக் பிரசன்னா, தங்கதுரை உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 3, வை ராஜா வை திரைப்படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாமின் பாடல்கள் சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது நடிகை நிரோஷா கூறியதாவது –
ரஜினி சாருடன் முன்பு நடிக்க வந்த வாய்ப்பு தவறி போனது. பல ஆண்டுகளாக நான் சினிமாவில் நடித்து வருகிறேன். இருப்பினும் ரஜினி சாருடன் நடிக்காமல் என்னுடைய சினிமா பயணம் முழுமை அடையாமல் இருந்தது. இப்போது லால் சலாம் படத்தில் நடித்திருப்பதன் மூலம் எனது நடிப்பு வாழ்க்கை முழுமை பெற்றதாக உணர்கிறேன். ரஜினி சாருடன் நடிக்க மாட்டோமா என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு ஜோடியாக லால் சலாம் படத்தில் நடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த வாய்ப்பை அளித்த ஐஸ்வர்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சூப்பர் ஸ்டாரின் மகள் என்பதை போல் இல்லாமல் மிகவும் இயல்பாக, எளிமையாக படப்பிடிப்பு தளங்களில் ஐஸ்வர்யா பணியாற்றுவார். எதையும் மேலோட்டமாக செய்யாமல் முழுவதுமாக இறங்கி வேலை பார்க்கக் கூடியவர்.
தனக்கு என்ன வேண்டுமோ அதில் ஐஸ்வர்யா மிகத் தெளிவாக இருப்பார் அவரைப் போன்ற பெண் இயக்குநரிடம் பணியாற்றியது எனக்கு பெருமை அளிக்கிறது. அவரிடம் உதவியாளராக இருந்தால் இன்னும் நிறைய கற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.