அனிருத்தை புறக்கணிக்கும் ரஜினி மகள்கள்…?
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குநராக அறிமுகமான 3 படத்தில் அனிருத் அறிமுகமானார். அதில் இடம்பெற்ற, ஒய் திஸ் கொல வெறி… பாடல் உலக அளவில் பிரபலமானது. அதன் பிறகு தொடர்ந்து தன்னுடைய படங்களில் அனிருத்தை இசையமைப்பாளராக்கினார் தனுஷ்.
சிவகார்த்திகேயனுடனான கருத்து வேறுபாடுக்குப் பின், அனிருத்தை தனது படங்களில் பயன்படுத்துவதை தவிர்த்தார் தனுஷ். அதனை ஐஸ்வர்யாவும் பின்தொடர்ந்தார். அவரது இரண்டாவது படம் வை ராஜா வை -க்கு யுவன் இசையமைத்தார். வேலையில்லா பட்டதாரிக்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில், வேலையில்லா பட்டதாரி 2 க்கு ஷான் ரோல்டன் இசையமைத்தார். இந்தப் படத்தை தனுஷ் நடிப்பில் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா இயக்கியிருந்தார்.
தனுஷுடன் அனிருத்துக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரது மனைவி ஐஸ்வர்யாவும், அவரது தங்கை சௌந்தர்யாவும் தனுஷ் வழியில் அனிருத்தை புறக்கணித்ததாக கூறப்பட்டது. தற்போது தனுஷின் கட்டுப்பாட்டில் ஐஸ்வர்யா இல்லை. இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், ஐஸ்வர்யாவின் லால் சலாம் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். அடுத்து சௌந்தர்யா ராகவா லாரன்ஸை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். தாணு இதனை தயாரிக்கிறார். இந்தப் படத்திலும் அனிருத் இல்லை என்கிறார்கள். ஜீ.வி.பிரகாஷ் அல்லது ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கக்கூடும் என்பது கோடம்பாக்க தகவல்.
லால் சலாம் படத்துக்கு இசையமைக்க நேரமில்லை என்று அனிருத் மறுத்ததாலேயே அவரை ரஜினி மகள்கள் புறக்கணிப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம், சுமாரான ஜெயிலர் படத்தை அனிருத்தின் இசையே சூப்பராக்கியது என்று ரஜினியே ஜெயிலர் விழாவில் அனிருத்தை புகழ்ந்து பேசியிருந்தார். கால்ஷீட் பிரச்சனையே அனிருத் தவிர்க்கப்பட காரணமேயன்றி அவர்களுக்குள் எந்த மனஸ்தாபமும் இல்லை என்கிறவர்களும் இருக்கிறார்கள். சௌந்தர்யா படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகையில் இந்த குழப்பங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.