தெறி இந்தி ரீமேக்கின் பெயர் என்ன தெரியுமா?
ராஜா ராணியில் தொடங்கிய அட்லியின் இயக்குநர் பயணம் தெறி, மெர்சல், பிகில் என்று உயர்ந்து, ஜவானில் உச்சம் தொட்டு நிற்கிறது. அடுத்து ஹாலிவுட்டில் படம் செய்ய வேண்டியதுதான் பாக்கி.
இயக்குநராக இருப்பதுடன், தனது ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் சார்பில் அட்லி படங்களும் தயாரித்து வருகிறார். ஜவானில் கிடைத்த பாலிவுட் அறிமுகத்தை வைத்து, தனது தெறி படத்தை தனது நிறுவனம் சார்பில் இந்தியில் ரீமேக் செய்கிறார். பாலிவுட்டில் தென்னிந்திய திரைபிரபலம் தனியாக கோலோச்ச முடியாது, அனுமதிக்க மாட்டார்கள். இந்த தெறி ரீமேக்கில் அட்லியுடன் ஜியோ ஸ்டுடியோஸ், சினி 1 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.
தெறியில் விஜய் நடித்த வேடத்தை இந்தியில் வருண் தவான் செய்கிறார். எமி ஜாக்சன் நடித்த வேடத்தில் கீர்த்தி சுரேஷும், சமந்தா நடித்த வேடத்தில் வாமிகா கபியும் நடிக்க உள்ளனர். இயக்குநர் மகேந்திரன் நடித்த வில்லன் வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கக் கூடும் என்கின்றனர். சமீபத்தில் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டது.
இந்நிலையில் இந்த ரீமேக்கிற்கு பேபி ஜான் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக அட்லி தெரிவித்துள்ளார். வரும் மே 31 ம் தேதி படம் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது. காளிஸ் இந்த ரீமேக்கை இயக்குகிறார். வருண் தவானின் 18 வது படமாக இது தயாராகிறது.