திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஹாக்கி வீரர் மீது போக்சோ வழக்கு!
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அணியில் டிபெண்டராக இடம் பெற்று விளையாடி வருபவர் வருண் குமார். கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியானது வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. இதே போன்று ஹாங்சோ ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றது. கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய ஹாக்கி அணி தங்கம் கைப்பற்றியது.
இந்த நிலையில் தான் வருண் குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலமாக தன்னுடன் பழகிய 17 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணை திருமண ஆசை காட்டி 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். தற்போது அந்தப் பெண்ணிற்கு 22 வயதாகும் நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள கூறியிருக்கிறார். ஆனால், வருண் குமார் மறுப்பு தெரிவிக்கவே, அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.
ஹாக்கி போட்டிகளுக்காக பெங்களூருவில் உள்ள சாய் ஸ்டேடியத்திற்கு வருகை தந்த போது திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் உடலுறவு கொண்டுள்ளார் என்று அந்த புகாரில் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வருண் குமார் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த வருண் குமார் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வசிந்து வந்தார். தற்போது அவர் தப்பியோடிய நிலையில் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து ஹிமாச்சல் பிரதேச அரசு அவருக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.